பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கினார் பாண்டிராஜ். ஆனால், பல்வேறு முன்னணி நாயகர்களும் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்கள்.

விஜய்யிடம் கதைச் சொல்லியிருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், பாண்டிராஜின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கவுள்ளது என்ற செய்தி மட்டும் வெளியானது. இறுதியாக சூர்யா - பாண்டிராஜ் சந்திப்பு நடந்தது. அப்போது பாண்டிராஜ் சொன்ன கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துவிடவே, கூட்டணி முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் எனத் தெரிகிறது.

இப்போது சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in