Last Updated : 15 Oct, 2020 07:49 PM

 

Published : 15 Oct 2020 07:49 PM
Last Updated : 15 Oct 2020 07:49 PM

‘’ரஜினிக்கு மூவாயிரம் ரூபாதான் சம்பளம். ‘பாக்கி 500 ரூபாயை எப்போ தரப்போறீங்க’ன்னு ரஜினி இப்பவும் கேட்டுக்கிட்டே இருக்கார்! ; கமலுக்கு 27 ஆயிரம், ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம், 5 லட்சத்துல படமே எடுத்து முடிச்சேன்!’’ - பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ அனுபவங்கள் 

‘’கமலுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய். ரஜினிக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளம். இதில் ரெண்டாயிரத்து ஐநூறு கொடுத்தேன். ‘மீதி ஐநூறு ரூபாயை இன்னும் தரலையே’ என்று ரஜினி இப்போது பார்த்தாலும் கேட்டுக்கொண்டே இருப்பார். ஐந்து லட்ச ரூபாயில் ‘16 வயதினிலே’ படத்தை எடுத்து முடித்தேன்’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா ‘என் இனிய தமிழ்மக்களே’ எனும் இணையதள சேனலில், தன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

‘16 வயதினிலே’ படம் எடுத்தது குறித்தும் மனோஜ் என்று மகனுக்கு பெயர் வைத்தது குறித்தும் விவரித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

‘’மனோஜ் என்று என் பையனுக்குப் பெயர் வைத்தேன். ஏன் தெரியுமா? இந்தியில் மனோஜ்குமார் என்றொரு நடிகர் இருந்தார். தேசியப் படங்கள், தேசப்பற்று மிக்க படங்கள் என்றுதான் அவர் படங்கள் இருக்கும். மிகப்பெரிய நடிகர். இப்போது அவர் இல்லை. அதனால் அவர் மேல் எனக்கு பற்று அதிகம்.

பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றால், இங்கே நம்மூரில் சின்னச்சாமி, பெரியசாமி, துரைச்சாமி என்றுதான் இருக்கும். மனோஜ்குமார் என்று வைப்பது என முடிவுசெய்தேன். அந்த வடநாட்டு நடிகரின் நினைவாக இந்தப் பெயர் வைத்தேன். மனோஜ்குமார். மனோஜ் மனோஜ் என்று கூப்பிடுகிறோம்.
சரி... ‘16 வயதினிலே’ விஷயத்துக்கு வருவோம்.

டிஸ்கஷன் நடந்துகொண்டிருந்தது. அடுத்து லொகேஷன் பார்க்கப் போகவேண்டும். நிவாஸ்தான் ஒளிப்பதிவாளர். இப்போது சந்தோஷ் சிவன் இருக்கிறாரே... அவரின் அப்பா சிவன். அவரும் பெரிய ஒளிப்பதிவாளர். திருவனந்தபுரத்தில் அவரிடம்தான் தரமான கேமிரா இருக்கும். அவரிடம் உதவியாளராக இருந்தான் நிவாஸ். அப்போதிருந்தே எனக்குப் பழக்கம்.

’16 வயதினிலே’ படத்திற்கு முதலில் நான் நினைத்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. அப்போது மலையாளத்தில் ‘நெல்லு’ என்றொரு படம். சூப்பர் ஹிட். அப்போதுதான் பாலு மகேந்திரா பேசப்படுகிறார். அவரைக் கேட்டேன். அவர் பிஸியாகிவிட்டார். அப்புறம் தான் நிவாஸ். மிகப்பெரிய திறமைசாலி.

திருவனந்தபுரத்தில் இருந்து கேமிரா எடுத்து வந்தான். நானும் நிவாஸும் லொகேஷன் பார்க்கப் போகவேண்டும். இந்த சமயத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். என் மகன் லக்கி என்றுதான் சொல்லவேண்டும். அப்போது 75 ரூபாய் சம்பளத்தில் வாடகைக்கு இருந்தேன். ஹாம்ரிங்டன் பிரிட்ஜ் அருகில் ஒரு தெருவுக்குள் இருக்கிற சந்தில். சிறிய வீடு. அந்த வீட்டுக்கு என் முதலாளி ராஜ்கண்ணு, அவர் மனைவி வந்தார்கள். அவரின் மனைவியை அக்கா என்றுதான் கூப்பிடுவேன்.

தொட்டிலில் மனோஜ் குழந்தையாகப் படுத்துக்கொண்டிருந்தான். முதலாளியும் அவர் மனைவியும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, தொட்டிலில் குழந்தை மீது வைத்தார்கள். ’இதை எடுத்துட்டுப் போய் வேலையை ஆரம்பிங்க’ என்றார்கள். பணத்தை எடுத்துக்கொண்டு நானும் நிவாஸும் மைசூர் போனோம். பெங்களூர். அங்கிருந்து மைசூர். அதைச் சுற்றியுள்ள ஊர்களைப் பார்த்தோம். என்னுடைய பெரும்பாலான படங்கள், அங்கேதான் எடுக்கப்பட்டன. தமிழ் கிராமமாகக் காட்டியிருப்பேன். ஆனால் இங்கேதான் படமாக்கினேன்.

அந்த சமயத்தில், வீட்டில் கொஞ்சம் கஷ்டம். ‘பால் வாங்கணும், அது வாங்கணும். அந்தப் பணத்துல கொஞ்சம் கொடுத்துட்டுப் போங்க’ என்று மனைவி சொன்னார். நான் சொன்னேன்...’இந்தப் பணத்துலேருந்து நயா பைசா கூட தரமாட்டேன். என் முதலாளி என்னை நம்பிக் கொடுத்துருக்கார். இது என் தொழில். உனக்கு பணம் வேணும்னா, உன் வீட்ல கேட்டு வாங்கிக்கோ. என் பிரதர்ஸ் வருவான். அவன்கிட்ட கேட்டு வாங்கிக்கோ’ என்று சொல்லிவிட்டேன். லொகேஷன் பார்க்கக் கிளம்பிவிட்டேன்.
அங்கேயே இருந்துகொண்டு, யூனிட்டில் உள்ளவர்கள் எல்லோரையும் வரச்சொல்லிவிட்டேன். வந்தார்கள். நான்கு நாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. மனதில் பையனைப் பற்றி நினைப்பு. பணத்துக்கு என்ன செய்வார்கள் என்றெல்லாம் நினைப்பு. போன் கூட பேச முடியாது.

போன் பேசுவதாக இருந்தால், மைசூரில் இருந்து பெங்களூர் வரவேண்டும். அங்கே டிரங்க் கால் புக் செய்யவேண்டும். காத்திருக்க வேண்டும். போன் பேசுவதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்பக் குறைவு. கடிதம்தான்.

அப்போது ஒரு கடிதம். மனைவி எழுதியிருந்தார். அதை முதலாளிப் பிரித்துப் படித்துவிட்டார். அதில் கஷ்டங்களையெல்லாம் சொல்லி எழுதியிருந்தார். இதைப் பார்த்துவிட்டு கோபமாகிவிட்டார் முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ’ஏன்யா... நீயென்ன பெரிய டைரக்டரா? உனக்கு குடும்பம் பெருசா? இந்த வேலை பெருசா? அன்னிக்கே நீ இதுலேருந்து பணத்தை எடுத்து கொடுத்துட்டு வந்திருக்கவேணாமா? ’ என்று திட்டினார். ’இது உங்க பணம். படத்துக்கான பணம். இதுலேருந்து பத்துபைசா கூட எடுக்கமாட்டேன்’ என்று சொன்னேன். அதற்குப் பிறகும் கூட, ‘நீ சுத்தமானவன்டா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார் ராஜ்கண்ணு.

மனிதனுக்கு நாணயம் அவசியம். அந்தப் படத்தை, ‘16 வயதினிலே’ படத்தை ஐந்து லட்ச ரூபாயில் எடுத்து முடித்தேன். அவுட்டோர் யூனிட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய். கமலுக்கு மட்டும்தான் அதிக சம்பளம். 27 ஆயிரம் ரூபாய். ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய். ரஜினிக்கு 3 ஆயிரம் ரூபாய். மூவாயிரத்தில், ரெண்டாயிரத்து ஐநூறுதான் கொடுத்தேன். ஐநூறு ரூபாய் பாக்கி வைத்துவிட்டேன். எப்போது பார்த்தாலும் ‘அந்த ஐநூறு ரூபாய் தரலியே பாரதி’ என்று ரஜினி கேட்டுக்கொண்டே இருப்பார்.
கடுமையா உழைத்துப் படமெடுத்தோம்.

நிவாஸிடம் ஒரு பைக் இருக்கும். அந்த பைக்கை ரயிலில் போட்டு கொண்டு வந்து, மைசூரில் அந்த பைக்கில்தான் நானும் நிவாஸும் கிராமங்களுக்குச் செல்வோம். பின்னால் ஒரு வேன். கமல், ரஜினி, ஸ்ரீதேவிக்கெல்லாம் கார். அவ்வளவுதான். இப்படித்தான் படத்தை முடித்தோம்.

அந்தச் சமயத்தில், காந்திமதியம்மாவை என்னால் மறக்கவே முடியாது. புரொடக்‌ஷன் பணத்தைத் தொடமாட்டேன். பாக்கெட்டில் பத்து ரூபாய் வைத்திருப்பேன். கமலுக்கு ஒரு இளநீர். ஸ்ரீதேவிக்கு ஒரு இளநீர். ரஜினிக்கு ஒரு இளநீர். மற்றவர்களுக்கெல்லாம் வடை வாங்கிக் கொடுத்துவிடுவேன். பிரேக்கில் இதுதான்.
நான் தங்கியதெல்லாம் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும்தான் அறைகள் போட்டுக்கொடுத்தோம். நானும் ரஜினியுமெல்லாம் வராண்டாவில்தான் படுத்துக்கொள்வோம். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் ‘16 வயதினிலே’. இன்றைக்கெல்லாம் இமேஜிங் கூட பண்ணமுடியாது.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x