

அரசியல் துறையிலும் திரைத் துறையிலும் எந்த நிலையிலும் கலங்காத மனதுடன் விளங்கியவர் ஆர்.எம்.வீரப்பன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
எம்ஜிஆர் நடித்து ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த திரைப்படங்களை சிறிய வயதில் திரையரங்குகளில் முதல்நாளே பார்த்து ரசித்தவன் நான். அப்படிப்பட்ட ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பிலேயே பின்னாளில் நானும் கதாநாயகனாக நடிப்பேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை.
ஆர்.எம்.வீ.யின் தயாரிப்பில் வெளியான `பாட்ஷா’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது. அப்படத்தின் விழாவில் நான் பேசிய பேச்சு, பெரும் விவாதத்துக்குள்ளானது. அதன் விளைவாக ஆர்.எம்.வீ. பதவி இழந்தார். அவரிடம் எனது மன்னிப்பை கோருவதற்காகச் சென்றேன். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் `இது காலத்தின் கட்டாயம்’ என்றார். இதுபோன்ற எத்தனை சோதனைகள் வந்தாலும் அதைக் கண்டு கலங்காத மனிதராக திரைப்படத் துறையிலும் அரசியல் துறையிலும் சிறந்து விளங்கியவர் ஆர்.எம்.வீரப்பன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விழாவில் முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், கு.ரா.கோகுலகிருஷ்ணன், மோகன், தொழிலதிபர்கள் பழநி ஜி.பெரியசாமி, நல்லி குப்புசாமி, பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமனுக்கு ராமசுப்பையா நினைவு விருது வழங்கப்பட்டது.