Last Updated : 07 Oct, 2020 07:04 PM

Published : 07 Oct 2020 07:04 PM
Last Updated : 07 Oct 2020 07:04 PM

’’20 நாளில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ எடுத்தேன்; அந்த பங்களாவுக்காக அலைந்தேன்; கறுப்புப் பூனைக்காக கேஸ் போட்டார்கள்!’’  - இயக்குநர் பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ சுவாரஸ்யங்கள்

‘’20 நாளில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை எடுத்தேன். அந்த பங்களா கிடைக்காமல் அலைந்தேன். படத்தில் வரும் கறுப்புப்பூனைக்காக நாங்கள் பட்ட பாடு மறக்கவே முடியாது. பூனைக்காக கேஸ் போட்டார்கள்’’ என்று இயக்குநர் பாரதிராஜா ‘சிகப்பு ரோஜாக்கள்’ பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் சேனலில் இயக்குநர் பாரதிராஜா, தொடர்ந்து தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

அதில் அவர் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் குறித்து தெரிவித்திருப்பதாவது:

‘’இரண்டு படங்களைச் செய்திருந்தேன். ‘16 வயதினிலே’, அடுத்து ‘கிழக்கே போகும் ரயில்’. இதன் பின்னர் எடுத்ததுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இரண்டு கிராமியப் படங்களை எடுத்தவர், கிராமத்தில் இருந்து வந்தவர், எப்படி நகரத்தின் சாயலில் படமெடுப்பார் என்று அப்போது பத்திரிகைகளில் எழுதினார்கள்.

‘கிழக்கே போகும் ரயில்’ படம் ஒருவருடத்தைத் தாண்டி ஓடியது. சென்னை தேவி தியேட்டரில் ஒருவருடம் கடந்து ஓடியது. தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ ஒரு தீபாவளிக்கு வெளியாகி, அடுத்த தீபாவளி வரை ஓடியது என்பார்கள். அதற்குப் பிறகு அப்படி ஒருவருடம் ஓடிய படம் ‘கிழக்கே போகும் ரயில்’. பாராட்டுகள் நிறைய இருந்தாலும் என் மேல் சில கேள்விகளும் இருந்தன. அந்தக் கோபத்தில் உருவானதுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’.

பெரிதாக படிக்கவில்லையென்றாலும் எப்போதாவது ‘இல்லஸ்டிரேட் வீக்லி’ மாதிரியான புத்தகங்களை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தைக் கொண்டு படிப்பேன். அதில் ஒரு கட்டுரை படித்தேன். ‘ராமன் ராகவா’ என்பவன் திருநெல்வேலியைச் சேர்ந்தவன், மும்பையில் இருந்தான். அவன் 12 பெண்களைக் கொலை செய்தான். அவன் ஏன் அப்படி கொலை செய்தான் என்று அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

அவனுக்கு எப்போதும் இரவுப்பணிதான். அதனால் மனைவிக்குத் துணையாக தன் நண்பனை வைத்துவிட்டு, வேலைக்குச் செல்வான். ஒருமுறை பார்த்தபோது, மனைவியும் நண்பனும் தவறாக இருப்பதைப் பார்த்துவிட்டு, மனைவியையும் நண்பனையும் கொன்றுவிடுகிறான். அதன் பின்னர், பெண்கள் என்றாலே அவர்கள் மீது அவனுக்கு வெறுப்பு. 12 பெண்களைக் கொலை செய்தான். அவனை போலீஸ் கைது செய்தது. அப்போது மிகப்பெரிய அளவில் பிரபலமான கேஸ் அது.

மாடர்னாக ஒரு படம், த்ரில்லராகவும் இருக்கவேண்டும் என்று எடுத்ததுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. ’கிழக்கே போகும் ரயில்’ படத்தின் பெரிய வெற்றிக்குப் பின்னர், இந்தக் கதையை இரண்டு மூன்று ஹீரோக்களுக்கு சொன்னேன். ஆனால் இந்த நெகட்டீவ்வான ரோலில் நடிக்க தயங்கினார்கள். அதில் நம் ஆளு, பரமக்குடியான் இருக்கிறாரே... ரொம்பவே துணிச்சல் மிக்க ஆளு. புதிய முயற்சிகளில் ஆர்வமுள்ளவர். இன்று வரைக்கும் கதாபாத்திரத்துக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார். கேரக்டர்தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பார். இல்லையெனில் ‘சப்பாணி’ கேரக்டரைப் பண்ணியிருப்பாரா? வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு, ஜலக்கு ஜலக்கு என்று ஒரு நொண்டி மாதிரி ஒரு ஹீரோ பண்ணமுடியுமா?

அந்த கமல், மர்டர் பண்ணுபவராக, சைக்கோ கில்லரா நடிக்கக் கேட்ட போது, ‘என்ன தேனிக்காரரே... இதைப் போய் கேக்கறீங்களே. கலைஞனுக்கு எல்லையே இல்லை. இந்த பாட்டில் வேறு, அந்த பாட்டில் வேறு. அப்படி மாறணும். அவன் தான் நல்ல கலைஞன்’ என்றார். எனக்கு பெரிய சந்தோஷம்.

காஸ்ட்யூமெல்லாம் அவரே பார்த்துக்கொண்டார். அப்போது வாணி கணபதி மேடம் இருந்தார்கள். ரொம்ப மாடர்ன் காஸ்ட்யூம்ஸ் எல்லாம் போட்டு, படத்தை ஆரம்பித்துவிட்டோம். ’பாம்குரோவ் ஹோட்டல்’ என்று உண்டு. அதன் எதிரே பங்களா. அதில்தான் படமெடுத்தோம். எல்லாம் வந்தாச்சு. ஆனால் மைண்ட் செட்டாகவில்லை. கமலுக்கு குழப்பம்... ‘என்ன தேனிக்காரரே... என்னாச்சு என்னாச்சு’ என்றார்.

எனக்கு அந்த வீடு செட்டாகவில்லை. நான் இமேஜ் செய்தது போல் அந்த வீடு இல்லை. திரும்பவும் வீடு தேடுகிறோம். அதாவது எல்லோரும் படப்பிடிப்புக்கு ரெடி. ஆனால் வீடு திருப்தியில்லை. சுற்றுகிறோம். இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம். ஹீரோ இல்லாமலே படம் எடுப்பேன். ஹீரோயின் இல்லாமலே படம் எடுக்க ஆரம்பித்துவிடுவேன். முரட்டுத்தனமான தைரியம், துணிச்சல்.

லொகேஷன் கிடைக்கவில்லை. நானும் கமலும் காரில் ஏறிக்கொண்டு சுற்றினோம். தி.நகரில் பார்க். அதற்கு எதிரே நாகர் ஹவுஸ் என்றொரு பங்களா. எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. கமலிடம் சொன்னேன். ‘அப்படியா, வாங்க போய்க் கேப்போம்’ என்றார். யார், என்ன என்றே தெரியாமல் எப்படி போய்க் கேட்பது?

கூர்க்காவிடம் கேட்டுவிட்டு உள்ளே போனோம். வடநாட்டுக்காரர் ஒருவர், கார்மெண்ட்ஸ் நடத்திவருகிறார். துணிகளையெல்லாம் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்புகிற தொழில் செய்து வருகிறார். அவர்களுக்கு என்னை தெரியவில்லை. கமலைக் கொஞ்சம் தெரிந்துகொண்டார்கள். விஷயத்தைச் சொன்னதும், பெருந்தன்மையுடன் உள்ளே போய் பார்க்கச் சொன்னார்கள். உள்ளேயெல்லாம் போகவில்லை. இதுதான் அந்த வீடு என்று முடிவெடுத்துவிட்டேன். படமெடுக்கவும் ஒத்துக்கொண்டார்.
உடனே எல்லாவற்றையும் ஷிப்ட் செய்து இங்கே கொண்டு வந்தோம். ஒரு இடம் நம்மிடம் பேசும். ஒரு லொகேஷன், என்னை இப்படி இப்படியெல்லாம் எடுத்துக்கோ என்று சொல்லும். நன் எந்த லொகேஷனுக்குப் போனாலும் அந்த இடங்களிடம் பேசுவேன். அந்த இடமும் எனக்கு இடம் கொடுக்கும்.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இன்னொரு பியூட்டி தெரியுமா?

படத்தை இருபது நாளில் முடித்தேன். இப்போதெல்லாம் அறுபது எழுபது நாளாகும். மொத்தம் 28 நாளிலேயே எல்லாவற்றையும் எடுத்து முடித்தேன். டிராலி ரெடியாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் எப்படி எடுக்கவேண்டும் என்று மைண்டில் வைத்திருந்தேன். படம் முழுக்க எங்கெல்லாம் டிராலி ஷாட் வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தேனோ மொத்தத்தையும் மூன்றே நாளில் டிராலி ஷாட்டுகளையெல்லாம் எடுத்துவிட்டேன். அது படம் முழுக்க பல இடங்களில் வரும்.

இன்னொரு விஷயம்... படத்தில் ஒரு பூனை தேவைப்பட்டது. நண்பர் ஆர்.சி.பிரகாஷ் மூன்று பூனைகள் வளர்த்து வந்தார். பூனையை இப்போதுதான் வளர்த்து வருகிறேன். ஆனால் அப்போது பூனையெல்லாம் வளர்க்கிறார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மூன்று பூனை வளர்த்தார்கள். அதில் ஒரு கறுப்புப்பூனை. கேட்டோம். சரியென்று சொல்லிவிட்டார்.

பூனையை வைத்து நடிக்க வைத்தோம். இரண்டு நாள் பூனை நடித்தது. மூன்றாவது நாள் பூனையைக் காணோம். தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. சாரில் இருந்து எல்லோருக்கும் டென்ஷன். ஷாக். பூனையைக் காணவில்லை என்றதும் பூனைக்கு உரியவர் கேஸ் போட்டுவிட்டார். பிறகு அந்தப் பூனையை வளர்த்தவரிடம் காம்ப்ரமைஸ் பண்ணினோம். அவர் கேஸ் போட்டது சரிதான். நியாயம்தான். ஆசை ஆசையாக பூனையை வளர்த்தவர் அல்லவா.

அந்தப் பூனை என்னானது என்று இன்று வரைக்கும் தெரியவில்லை.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x