

'வல்லவனுக்கு வல்லவன்' என்ற புதிய படத்தை பாபி சிம்ஹா தயாரித்து நடிக்க இருக்கிறார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
'பீட்சா', 'சூது கவ்வும்', 'நேரம்', 'ஜிகர்தண்டா' போன்ற வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. 'ஜிகர்தண்டா' படத்தில் அசால்ட் சேது என்ற பாத்திரத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.
இவரது நடிப்பில் 'மெட்ரோ', 'மசாலா படம்', 'பாம்பு சட்டை', 'உறுமீன்', 'இறைவி', 'கோ 2' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.
இந்நிலையில், பாபி சிம்ஹா புதிதாக தனது நண்பர் சதீஷ் உடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 'அசால்ட் புரொடக்ஷன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்.
வல்லவனுக்கு வல்லவன் படத்தை புதுமுக இயக்குநர் விஜய் தேசிங்கு இயக்க இருக்கிறார். நாயகியாக ஸ்வேதா நாயர், பூஜா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரகு திக்ஷித் இசையமைக்க இருக்கிறார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.