எஸ்பிபி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

எஸ்பிபி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்
Updated on
1 min read

எஸ்பிபி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, இப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார் எஸ்.பி.பி. ஆனாலும் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கிறார். அவருடைய உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பதாவது:

"கோவிட்-19 தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.

அவர் விழிப்புடன் பதிலளிக்கும் நிலையில் இருக்கிறார், உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் அவரது தற்போதைய உடல் நிலை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்னும் சில நாள் அவர் இருக்க வேண்டும் என்ற தேவை இருக்கிறது"

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பது உறுதியாகியுள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in