

விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்றதால், இந்த வார இறுதியில் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் படம் என்பதால், படப்பிடிப்பு முன்பே முடிந்துவிட்டாலும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுவந்தன. முதலில் செப்.17ம் தேதியை கணக்கில் கொண்டு தான் படக்குழு பணியாற்றி வந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் அக்டோபர் 1ம் தேதி வெளியீடு என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
தற்போது அனைத்து கிராபிக்ஸ் பணிகளும் முடிவுற்று, படத்தின் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. செப். 11 அல்லது 12 ஆகிய தேதிகளில் சென்சார் பணிகள் முடித்துவிடும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து படத்தை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.