அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி

Published on

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு 'டைரி' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கே 13'. எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் சொன்ன கதை அவருக்குப் பிடித்திருக்கவே அதில் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

அருள்நிதி நடிப்பில் வெளியான 'டிமான்ட்டி காலனி' படத்தின் இயக்குநராக அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் இன்னாசி பாண்டியன் என்பது நினைவுகூரத்தக்கது.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், பெயரிடப்படாத இப்படத்தின் சில காட்சிகளை சென்னையில் எடுத்து முடித்துவிட்டு, ஊட்டியில் பிரதான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று (ஜூலை 21) அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளது படக்குழு.

'டைரி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் மற்றும் இசையமைப்பாளராக யோஹன் பணிபுரிந்துள்ளனர். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து வருகிறார்.

உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in