Published : 19 Jul 2020 19:24 pm

Updated : 20 Jul 2020 15:23 pm

 

Published : 19 Jul 2020 07:24 PM
Last Updated : 20 Jul 2020 03:23 PM

கமலின்  கமர்ஷியல் ’குரு’வுக்கு 40 வயது!  - இலங்கையில் செய்த மெகா சாதனை! 

kamal-guru

அப்போதெல்லாம் இந்திப் பாடல்களின் ஆதிக்கம் இருந்தது என்பார்கள். அதேபோல், இந்திப் படத்தை ரீமேக் செய்வது வழக்கமாக இருந்தது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்திப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி, தமிழில் எடுத்து வெளியிடுவதும் அந்தப் படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய வெற்றியை அடைவதும் பற்றிச் சொல்ல, மிகப்பெரிய பட்டியலே உண்டு. எழுபதுகளின் இறுதியில், ரஜினியின் ‘பில்லா’ இந்திப் படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இதேபோல், கமலும் பல படங்களில் நடித்தார். அதில் மிக முக்கியமான படமாக அமைந்ததுதான் ‘குரு’ திரைப்படம்.

இந்தியில் தர்மேந்திரா நடித்து மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘ஜுக்னு’. இங்கே சிவசக்தி பிலிம்ஸ் பேனரில் ஆர்.சி.பிரகாஷ் தயாரிப்பில் ‘குரு’ என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தை ஐ.வி.சசி இயக்கினார். கமல் ‘குரு’வாக நடித்தார்.

நம்மூர் ‘மலைக்கள்ளன்’ காலத்துக் கதைதான். அதாவது இருப்பவர்களிடம் அதுவும் கெட்டவர்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்து நல்லதுக்குப் பயன்படுத்தும் வழக்கமான ஹீரோ கதைதான். ஆனால் அதற்குள் அழகழகான விஷயங்களை கோர்த்துக் கொடுத்ததுதான் படத்தின் வெற்றிக்கு அஸ்திவாரமாக இருந்தது.
சுதந்திரப் போராட்ட காலத்தின் போராளி முத்துராமன். அவரின் அப்பா பூர்ணம் விஸ்வநாதனோ, வெள்ளைக்காரர்கள் தந்த பட்டத்தைப் பெருமையாக நினைப்பவர். போலீஸ் வரும் போது சந்தோஷமாக பிடித்துக் கொடுப்பார். ஆனால் முத்துராமன் மனைவி வெண்ணிற ஆடை நிர்மலாவோ கணவரை தப்பிக்கவைப்பார்.
அப்படியொரு போராட்டத்தில் முத்துராமன் இறந்துவிட்டார் எனும் தகவல் வரும். வெண்ணிற ஆடை மூர்த்தி மகனை அழைத்துக் கொண்டு கட்டட வேலைக்குச் செல்வார். அங்கே எஸ்.வி.ராமதாஸ் தவறாக நடப்பார். இதில் வெண்ணிற ஆடை நிர்மலா இறந்துவிடுவார். ராமதாஸை அந்தப் பையன் கொன்றுவிட்டு தப்பியோடிவிடுவார். அந்தப் பையன் தான் பின்னாளில்... கமல். வெளியுலகிற்கு அசோக். ஆனால் கொள்ளையடிப்பதில் ‘குரு’.

இந்த நிலையில் சொத்துக்கு ஆசைப்பட்டு, வேறொரு பையனை ‘இவன் தான் உங்க பேரன்’ என்று பூர்ணம் விஸ்வநாதனிடம் கொண்டுவிட, பொய்ப்பேரனாக வளர்ந்திருப்பார் மோகன் பாபு. ராமதாஸின் மகள் ஸ்ரீதேவி. ஆனால் இது தெரியாமல் இருக்கும் வரை ஸ்ரீதேவியைக் காதலிப்பார் கமல். அனாதைப் பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வரும் கமல், கொள்ளைக்கூட்டத் தலைவன் நம்பியாரிடம் இருந்து தங்கத்தையும் பணத்தையும் கொள்ளையடிப்பார்.

மேஜர் சுந்தர்ராஜனும் வி.கோபாலகிருஷ்ணனும் போலீஸ் அதிகாரிகள். அசோக் தான் குரு என்று சமூகத்தில் தெரியாது. இந்த நிலையில், தங்கத்தால் செய்யப்பட்ட மீன் ஒன்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதைக் கொள்ளையடிக்க கமல் திட்டமிடுவார். அத்தனைப் பாதுகாப்புகளையும் தாண்டி, தங்கமீனை கொள்ளையடித்துவிட்டு வரும் வழியில், கமலை முத்துராமன் காப்பாற்றுவார். தந்தை - மகன் என்பது பின்னே தெரியவரும். மகனைக் காப்பாற்ற ‘நான் தான் குரு’ என்று முத்துராமன் பொய் சொல்லுவார்.

இறுதியில், அப்பாவைக் காப்பாற்றி, கொள்ளைக்கூட்டத்தை அழித்து என வணக்கம் போடப்படும்.

கமல் - ஸ்ரீதேவி ஜோடியின் வெற்றிப் பட்டியலில் தனியிடம் பிடித்த படம் ‘குரு’. ஒய்ஜி.மகேந்திரன், ஐஎஸ்ஆர், ஜெயமாலினி முதலானோர் நடித்திருந்தார்கள். கமலின் ஸ்டைலீஷ் நடிப்பும் ‘குரு’வாக வேடமிட்டு வந்து கலக்குவதும் வெகுவாக ரசிக்கப்பட்டது. ஸ்ரீதேவியும் பாந்தமான அழகுடன் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தினார்.
ஹெலிகாப்டர் பாடல், சண்டைக் காட்சிகள், ரயில் சேஸிங், குதிரை என படம் பக்கா கமர்ஷியல் விஷயங்களுடன் காதல், செண்டிமெண்ட் என கலந்துகட்டி வந்தது. இந்தியாவின் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் என்று புகழ்பெற்ற வின்செண்டின் மகன் ஜெயனன் வின்செண்ட்டின் ஒளிப்பதிவு படத்தை அழகாகவும் காட்டியது. சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் காட்டியது.

இளையராஜாவின் இசை, படத்தின் ஆகச்சிறந்த பலம். ‘பறந்தாலும் விடமாட்டேன்’ பாட்டு ஹெலிகாப்டரில் நம்மையும் சேர்த்து பறக்கவைக்கும். ‘ஆடுங்கள் பாடுங்கள்’ குழந்தைகளுடன் குழந்தையாய் நம்மையும் குதூகலமாய் ஆடவைக்கும். ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’ பாடலைக் கேட்கும் போதும் பார்க்கும் போதும் நமக்கே போதையேறியிருக்கும். ‘பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா’ என்று காதல் நியாயத்தைப் பறைசாற்றும். ‘மாமனுக்கு பரமக்குடி மச்சினிக்கு தூத்துக்குடி’ பாடல், அந்தக் கால குத்தாட்டம். ’நான் வணங்குகிறேன் சபையிலே’ என்ற பாடல் தாளமிட வைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘குரு’ வரும் போது, ஒரு பிஜிஎம் பண்ணியிருப்பார் ராஜா. நம்மையும் ‘ஹார்ஸ் ரைடிங்’ போகச் செய்துவிடுவார்.

கமலின் ஹிப்பி முடியும் தொங்கு மீசையும் எண்பதுகளின் இளைஞர்களது மிகப்பெரிய க்ரேஸ். பெல்பாட்டம் பேண்ட், இடுப்பு பட்டை பெல்ட், பிடரி தாண்டிய முடி, மோவாய்க் கட்டையை இடிக்கும் மீசை என்று அந்தக் கால இளைஞர்கள் பலரும் உலா வந்தார்கள். ஐ.வி.சசியின் இயக்கம் கச்சிதம்.

மிகப்பெரிய வசூலைக் குவித்தது அப்போது. சிலோன் ரேடியோவில், இந்தப் படத்தின் பாடல்களை ஒருநாளைக்கு ஆறேழு தடவையாவது போட்டுவிடுவார்கள். தமிழகத்தில் பல தியேட்டர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. முக்கியமாக, இலங்கையில் இரண்டு மூன்று தியேட்டர்களில் வெளியாகி ஏகப்பட்ட வசூலைக் குவித்தது. முக்கியமாக, ஒரு தியேட்டரில், 1000 நாட்களைக் கடந்து ஓடியதுதான் இன்றுவரைக்குமான ரிக்கார்டு சாதனை.

கமல் பரீட்சார்த்தமாக இதில் சில விஷயங்கள் செய்திருப்பார். எலெக்ட்ரீஷியனாக வேடமிட்டு குரல் மாற்றிப் பேசுவார். அதேபோல், ‘நான் தான் குரு’ என்று இந்திக்காரர் போல் வேடமிட்டுக் கொண்டு ஸ்ரீதேவியிடம் வேறு குரலில் பேசுவார். ‘குரு’வாக ரயிலேறி, ‘நான் ரெட் ரோஸஸ்’ என்று சொல்லி ஆங்கிலக் கலப்பில் பேசுவார். இவையெல்லாம் பின்னாளில், ‘எல்லாம் இன்பமயம்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்ளிட்ட பல படங்களில் பேசுவதற்கான ஒத்திகை போல் இருந்தது.
இன்னொரு விஷயம்... படத்தின் டைட்டிலில், வசனம் - ஹாசன் பிரதர்ஸ் என்று இடம்பெற்றிருப்பதும் ஆச்சரியம்தான். ‘வசனம் - கமலஹாசன்’ என்றே போட்டிருக்கலாம். ஏன் போடவில்லை என்பது தெரியவில்லை.


1980ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியானது ‘குரு’. படம் வெளியாகி, 40 ஆண்டுகளாகின்றன. கமலின் கமர்ஷியல் பட வரிசையில் இன்றைக்கும் முக்கியமான இடத்தில் இருக்கிறான் ‘குரு’.


தவறவிடாதீர்!

கமலின்  கமர்ஷியல் ’குரு’வுக்கு 40 வயது!  - இலங்கையில் செய்த மெகா சாதனை!குருகமல்ஸ்ரீதேவிஹாசன் பிரதர்ஸ்கமலின் குருமுத்துராமன்இளையராஜாஐ.வி.சசிமோகன்பாபுKamalSrideviIlayaraaja

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x