

மணிரத்னம் படத்துக்காக நடந்த ஸ்கிரீன் டெஸ்ட் குறித்துப் பேசியுள்ளார் நடிகை அதிதி ராவ்
தமிழில் 2007-ம் ஆண்டு 'சிருங்காரம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையுமே ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்கச்சிவந்த வானம்' படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'சைக்கோ' படத்தைத் தொடர்ந்து, 'ஹே.. சினாமிகா' மற்றும் 'துக்ளக் தர்பார்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே மணிரத்னம் படத்தில் நடித்ததுதான் தன் வாழ்க்கையையே மாற்றியது என்று அதிதி ராவ் பேட்டி அளித்துள்ளார்.
அதில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்தது தொடர்பாக அதிதி ராவ் கூறியிருப்பதாவது:
"மணிரத்னம் படத்தில் நடித்ததுதான் என் வாழ்க்கையையே மாற்றிய தருணம். முதன்முதலில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது என் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தன. ஏனெனில் அப்போது ஸ்கிரீன் டெஸ்ட் நடந்துகொண்டிருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட காட்சியை நான் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்.
மணிரத்னம் பட ஹீரோயின் என்பது என் வாழ்நாள் கனவு. எனவே நான் அவரிடம் சென்று 'சார், எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால் உங்கள் படத்தில் நடிப்பதுதான் என் கனவு. இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை' என்று கூறிவிட்டேன். அவர் உடனே என்னைப் பார்த்து, 'நான் உனக்கு நடிக்கத் தெரியுமா தெரியாதா என்று டெஸ்ட் செய்யவில்லை, ஒரு இயக்குநராக எனக்கு நீ ரெஸ்பான்ஸ் செய்கிறாயா?' என்றுதான் பார்க்கிறேன் என்றார்.
அப்போதுதான் எனக்குப் புரிந்தது, லொக்கேஷன், மேக்கப், வசனங்கள், எதுவுமே முக்கியமில்லை. நடிகர், இயக்குநர், கேமரா இது மூன்றும்தான். இயக்குநரிடமிருந்து நாம் உள்வாங்கிய விஷயங்களை வெளிப்படுத்தவேண்டும். அது நமக்குள் ஊடுருவி வெளியேற வேண்டும். அதை மேக்கப் போட்டு எல்லாம் மறைக்க முடியாது".
இவ்வாறு அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.