'பொன்மகள் வந்தாள்' படத்தின் கதைக்களம்

'பொன்மகள் வந்தாள்' படத்தின் கதைக்களம்
Updated on
1 min read

அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் கதைக்களம் இடம்பெற்றுள்ளது.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் கூட, படத்தின் கதைக்களம் குறித்து எந்தவொரு தகவலையும் படக்குழு வெளிப்படுத்தவில்லை. இதனிடையே, அமேசான் ப்ரைம் தளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் கதைக்களம் என்ன என்பது இடம்பெற்றுள்ளது.

நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்க எடுக்கும் முயற்சிகளைப் பற்றிய பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் 'பொன்மகள் வந்தாள்'. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.

அவரது மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியே கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைத் தேடிப் பிடித்து சரி செய்கிறார். மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமான புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை எப்படி நிலைநாட்டுகிறார் என்பதே 'பொன்மகள் வந்தாள்' படத்தின் கதையாகும்.

இதில் வெண்பா என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்தான் ஜோதிகா நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக பார்த்திபன் நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in