'முந்தானை முடிச்சு' ரீமேக்: பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார்

'முந்தானை முடிச்சு' ரீமேக்: பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார்
Updated on
1 min read

பெரும் வரவேற்பைப் பெற்ற 'முந்தனை முடிச்சு' படம் ரீமேக் ஆகிறது. பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார்.

1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ஊர்வசி, தீபா, கே.கே.செளந்தர், 'பசி' சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு 'முந்தானை முடிச்சு' படம் ரீமேக் ஆகிறது.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம் சரவணனிடமிருந்து ஜே.எஸ்.பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் பாக்யராஜ் இயக்குவது முடிவானது.

பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் நடைபெறவுள்ளது. இசையமைப்பாளர் உள்ளிட்ட இதர படக்குழுவினர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in