காதலி சரி என்று சொல்லிவிட்டார்: நடிகர் ராணா ட்விட்டரில் பகிர்வு
நடிகர் ராணா தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்குச் சரி என்று சொல்லிவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு ’லீடர்’ என்ற தெலுங்குப் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராணா டகுபதி பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். 'பாகுபலி' திரைப்படத்தின் வில்லனாக ராணா இன்னும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் 'காடன்' படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாகவே ராணாவின் திருமணம் குறித்த வதந்திகள் வந்தபடி உள்ளன. அவ்வப்போது நடிகையைக் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது தனது காதலி யார் என்பது பற்றி ராணாவே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி. அவர் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார்.
ராணாவின் இந்தப் பதிவுக்கு ஸ்ருதி ஹாசன், தமன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
