

மீண்டும் 'ஹீரோ' டிஜிட்டலில் வெளியானதற்கு, திருக்குறளை மேற்கோள் காட்டி பதிலடிக் கொடுத்துள்ளார் இயக்குநர் மித்ரன்.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியானது. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. உதவி இயக்குநர் போஸ்கோ என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால், படக்குழு சரியான முறை ஒத்துழைக்காத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடக்கும் போதே படமும் வெளியானது. ஆனால், அதைத் தொடர்ந்து டிஜிட்டலிலும் வெளியிடப்பட்டது.
டிஜிட்டல் வெளியீட்டுக்கு தடைகோரி போஸ்கோ தாக்கல் செய்த மனுவை ஏற்று, 'ஹீரோ' டிஜிட்டல் வெளியீட்டுக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அதற்கு தடைவிதிக்க 'ஹீரோ' படக்குழுவினர் மனுத்தாக்கல் செய்தனர். அதற்கு நீதிமன்றத்தில் ஒரு தொகையைக் கட்டுவிட்டு, வெளியிடத் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று (மே 2) மாலை முதல் 'ஹீரோ' அமேசான் ப்ரைம் டிஜிட்டலில் மீண்டும் வெளியானது. இது தொடர்பாக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அமேசான் ப்ரைம் லிங்க்கை பகிர்ந்து "களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்" என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார்.
இந்த திருக்குறளுக்கு "அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது" என்பது அர்த்தமாகும். இருப்பதை வைத்துக் கொண்டு அளவாக வாழ்க்கை நடத்துபவர்களிடம் திருட்டுத்தனம் இருக்காது என்பதை திருக்குறளை மேற்கொளிட்டு பதிலடிக் கொடுத்துள்ளார் 'ஹீரோ' இயக்குநர் மித்ரன்.