விஜய் செய்த கிண்டல்; நடனத்தின்போது பட்ட கஷ்டம்: 'நண்பன்' அனுபவம் பகிர்ந்த ஜீவா

விஜய் செய்த கிண்டல்; நடனத்தின்போது பட்ட கஷ்டம்: 'நண்பன்' அனுபவம் பகிர்ந்த ஜீவா
Updated on
2 min read

'நண்பன்' படத்தில் விஜய்யுடன் நடனமாடியபோது தான் பட்ட கஷ்டத்தை நடிகர் ஜீவா பகிர்ந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'நண்பன்'. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக்தான் 'நண்பன்' என்பது நினைவு கூரத்தக்கது. இதில் ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார் நடிகர் ஜீவா.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"'நண்பன்' படத்தில் எனது கதாபாத்திரம், எனக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போல் இருந்தது. முதலில் விஜய் சார்தான் பண்ணுவதாக இருந்தது. அப்போது 'வேலாயுதம்' படத்தை முடிக்க வேண்டும் என்ற காரணத்தால், இந்தப் படம் பண்ணவில்லை என்பது போல் இருந்தது. ஆனால், படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டோம். அப்புறம் சூர்யா சார் இந்தக் கதாபாத்திரம் பண்ணுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

படத்தில் முதலில் வரும் பாடல் காட்சியில் யார் அந்த நண்பன் என்றே தெரியாமல் நடித்துக் கொண்டிருந்தோம். 'மாலையில் என்னப்பா விஜய் சார் ஒப்புக் கொண்டாரா' என்று கேட்போம். அவர் ஒப்பந்தமானவுடன்தான் சரி.. இனிமேல் அவரை நண்பனாக நினைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அப்புறம் ஒரு 10 நாள் ப்ரேக். பின்பு டேராடூன் உள்ளிட்ட இடங்களில் விஜய் சாருடன் படப்பிடிப்பு.

முதலில் விஜய் சாருடன் பாடல் படப்பிடிப்புதான் நடந்தது. நான் வேறு சில படங்களில் பயணம், நடனம் என முடித்துவிட்டுச் சென்றேன். 'ஹார்ட்டிலே பேட்டரி' என்ற பாடலுக்கு ஷோபி மாஸ்டர் வேறு ஒரு பீட்டுக்கு 25 ஸ்டெப் போடுகிறார். 'பாட்டு 10 விநாடிதான் இருக்கு. அதற்கு இவ்வளவு ஸ்டெப்பா' என்று கிண்டல் பண்ணினோம். விஜய் சார் இந்த ஸ்டெப்புக்கு ஓ.கே.சொல்லிட்டாரா என்று கேட்டால், அவர் ஓ.கே. சொல்லி பயிற்சி முடித்து தயார் என்றார்கள். 'என்னப்பா இது பயிற்சி செய்த மாதிரியே தெரியலயே' என்றேன்.

அப்புறமாக விஜய் அண்ணாவிடம், 'அண்ணா கொஞ்சம் ஸ்டெப் எல்லாம் கடினமாக இருந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன்' என்றேன். ஜாலியாக ஆடிக் கொண்டிருப்போம். உடனே விஜய் அண்ணா "நிறுத்துங்க அண்ணா. இவன் ஸ்டெப்பை விட்டுட்டான் அண்ணா" என்று பயங்கரமாகக் கலாய்ப்பார்.

பின்பு "ஒரு முறை ஏப்பா.. நீ ரொம்ப கலாய்க்குற.. என்னால வரிகளையே பாட முடியல" என்றார். "அண்ணா.. கலாய்க்கவில்லை. நீங்கள் முழுமையாக ஆடி முடித்துவிட்டு, நான் மட்டும் தனியாக வேறு ஸ்டெப் ஆடினால் நன்றாகவாக இருக்கும்" என்றேன். ஆகையால் "பாதியிலேயே நிறுத்திக் கொள்வோம் என்பதால் சொன்னேன்" என்றேன். அந்தப் படம் மறக்க முடியாத ஒரு அனுபவம்"

இவ்வாறு ஜீவா பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in