கூட்டத்திலிருந்து விலகி இருப்பதுதான் தற்போதைய தேவை: மகேஷ் பாபு வேண்டுகோள்

கூட்டத்திலிருந்து விலகி இருப்பதுதான் தற்போதைய தேவை: மகேஷ் பாபு வேண்டுகோள்
Updated on
1 min read

கூட்டத்திலிருந்து விலகி இருப்பதுதான் தற்போதைய தேவை என்று கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று இதுவரை 137 பேருக்கு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொற்று பரவாமல் இருப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் கரோனா வைரஸ் தொடர்பாக தங்களுடைய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

இது தொடர்பாகத் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு கூறியிருப்பதாவது:

''கூட்டத்திலிருந்து விலகி இருப்பதுதான் தற்போதைய தேவை. கடினமான முடிவுதான். ஆனால், அதை எடுக்க வேண்டும். சமூக வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். இந்த நேரத்தை உங்களுக்குப் பிடித்தவர்களுடன், உங்கள் குடும்பத்துடன் செலவிடுங்கள். இது இந்தக் கிருமி பரவாமல் தடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்றும்.

உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை, சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சானிட்டைஸர்களை அதிகம் பயன்படுத்துங்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தால் மட்டும் முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள். இந்தத் தொற்று காணாமல் போகும் வரை நாம் தேவையான வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். நாம் அனைவரும் இதில் சேர்ந்து இருக்கிறோம். இதை இணைந்தே எதிர்கொள்வோம். அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19ஐ தோற்கடிப்போம். பாதுகாப்புடன் இருங்கள்.”

இவ்வாறு மகேஷ் பாபு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in