

கரோனா கிருமி மக்களை, பல குடும்பங்களை, சமூகத்தைத் தனிமைப்படுத்திவிட்டது என்று நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 110 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.
கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக, நடிகர் கவுதம் கார்த்திக் தனது இணையத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”இந்தக் கிருமி எவ்வளவு ஆபத்தானது என்பதும் அது எப்படி உலகம் முழுவதும் பரவியுள்ளது என்பதும் உங்கள் அனைவருக்குமே தெரியும் என நினைக்கிறேன். வெளியே செல்ல, அக்கம் பக்கத்தினரிடம் பேச, தங்களுக்குப் பிடித்தவர்களைப் பார்த்துக் கொள்ளக் கூட மக்கள் பயப்படுகிறார்கள்.
மற்றவர்களிடம் இல்லாத அல்லது கிடைக்காத பொருட்களை சில மக்கள் அபரிமிதமாகச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கிருமி மக்களை, பல குடும்பங்களை, சமூகத்தைத் தனிமைப்படுத்திவிட்டது. பயத்தால் உலகம் செயலற்றுப் போயிருக்கிறது. இந்தக் கிருமியின் மீதிருக்கும் பயத்தால் நமது வலிமையை அழிக்காமல் பார்த்துக் கொள்வோம்.
பொறுப்போடு, முகமூடி அணிந்து, சானிடைஸர்களை உபயோகிப்போம். உங்களிடம் மிகுதியாக இருந்தால் அதை இல்லாதவர்களுக்குக் கொடுங்கள். உங்களுக்குக் கிருமித் தொற்று இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மறைந்து கொள்ளாதீர்கள். சிகிச்சை எடுத்துக்கொண்டு உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் காப்பாற்றுங்கள். மேற்கொண்டு இந்தக் கிருமி பரவாமல் தடுக்கத் தயாராக இருப்போம்”.
இவ்வாறு கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.