

கரோனா அச்சத்தால் திரையரங்குகள் மூடப்பட்டு வரும் நிலையில், புதிய படங்களின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் அச்சத்தைப் போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கேரள எல்லையோரத்தில் இருக்கும் மல்டிப்ளக்ஸ் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான 'தாராள பிரபு', 'வால்டர்' மற்றும் 'அசுரகுரு' ஆகிய படங்கள் எதற்குமே போதிய மக்கள் கூட்டம் வரவில்லை. இதனிடையே, கேரள எல்லையோரத்தில் உள்ள திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனை முன்வைத்து புதிய படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
மார்ச் 20-ம் தேதி வெளியாகவிருந்த 'காவல்துறை உங்கள் நண்பன்' மற்றும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த 'காடன்' ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளன. இதர படங்களின் வெளியீடும் தள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த மாதம் முடியும் வரை எந்தவொரு புதுப்பட வெளியீடும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் 'மாஸ்டர்' படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்படும் எனத் தெரிகிறது. ஏனென்றால் வெளிநாடுகளில் திரையரங்குகள் மூடல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடல், தமிழகத்தில் சில திரையரங்குகள் மூடல் உள்ளிட்டவை மனதில் கொண்டு விரைவில் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.