கரோனா அச்சம்: 'பொன்மகள் வந்தாள்' இசை வெளியீட்டு விழா ரத்து
கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக, 'பொன்மகள் வந்தாள்' இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார் ஜோதிகா. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்றது. கிளைமாக்ஸ் காட்சி தவிர்த்து மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு படக்குழு திரும்பியது.
சென்னையில் இதர காட்சிகளின் படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. 'பொன்மகள் வந்தாள்' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. மேலும், மார்ச் 27-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தார்கள்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க, நாளை (மார்ச் 17) சென்னையில் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரோனா வைரஸ் அச்சத்தால் தற்போது இசை வெளியீட்டு விழாவைப் படக்குழு ரத்து செய்துவிட்டது. சமூக வலைதளத்தில் பாடல்கள் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
'பொன்மகள் வந்தாள்' படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ரூபன் எடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
