

'மாஸ்டர்' படத்திலிருந்து வெளியிடப்பட்ட 'ஒரு குட்டிக் கதை' பாடலை சிம்பு பாராட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
முதலாவதாக அருண்ராஜா காமராஜ் எழுதி, விஜய் பாடிய 'ஒரு குட்டிக் கதை' பாடலை காதலர் தினத்தன்று மாலை 5 மணியளவில் வெளியிட்டார்கள். இந்தப் பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அனிருத் இசையமைத்த இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்துக்குள் உலகளவில் அதிகம் பேர் பார்த்த யூ-டியூப் வீடியோக்கள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தது.
தற்போது இந்தப் பாடலை சிம்புவும் பாராட்டியுள்ளார். இதனை எழுதிய அருண்ராஜா காமராஜுக்கு தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். சிம்பு வாழ்த்துக் கூறியது தொடர்பாக அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பதிவில், "எங்கள் குட்டி ஸ்டோரி பாடலுக்காக நீங்கள் தந்த அன்பு, பாராட்டுகள், நேர்மறை எண்ணங்களுக்கு மிக்க நன்றி எஸ்டிஆர். உங்களுக்கும் என் அன்பு. நெகிழ்ந்துவிட்டேன். உங்களிடமிருந்து இவ்வளவு அன்பு கிடைத்ததில் பெருமை" என்று தெரிவித்துள்ளார்.
முதலில் படப்பிடிப்பை முழுமையாக முடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவினை நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.
தவறவிடாதீர்