

ஆஸ்கர் விருது பெற்ற 'பாரசைட்' திரைப்படம் தமிழில் விஜய் நடித்த 'மின்சார கண்ணா' திரைப்படத்தின் காப்பி என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் குற்றம் சாட்டியுள்ளார். 'பாரசைட்' படத்தைத் தயாரித்தவர்கள் மீது வழக்குத் தொடர உள்ளதாகவும் தேனப்பன் கூறியுள்ளார்.
கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இவ்விழாவில் கொரிய நாட்டிலிருந்து வெளியான 'பாரசைட்' சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது. இதில் 'ஜோக்கர்', 'ஐரிஷ்மேன்', '1917', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்'ஆகிய திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விருதுகளையும் வென்றன. இம்முறை சிறந்த அயல்மொழித் திரைப்படம் என்ற விருதுப் பிரிவு, சிறந்த சர்வதேச திரைப்படம் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.
இவ்விழாவில், போங் ஜூன் - ஹோ இயக்கிய 'பாரசைட்' சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வென்றதோடு, சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளையும் வென்ற முதல் வெளிநாட்டு மொழித் திரைப்படமாக வரலாற்றை உருவாக்கியது.
'பாரசைட்' படத்திற்கு நிறைய விருதுகள் பெற்றமைக்கு பாராட்டுகள் குவிந்துவரும் அதே வேளையில் தற்போது அப்படம் ஒரு தமிழ் படத்தின் காப்பி என்ற பேச்சும் பரவலாக அடிபடத் தொடங்கியது. தமிழின் முக்கிய நடிகரான விஜய் நடித்த 'மின்சார கண்ணா' கதை திருடப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் வலைதளங்களில் பதிவிட்டனர்.
விஜய் நடித்து 1999-ல் வெளியான 'மின்சாரா கண்ணா' படத்தின் உரிமைகளை வைத்திருக்கும் தமிழ்த் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், கொரியத் திரைப்படமான 'பாரசைட்' தயாரிப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஆங்கில இணைய தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தேனப்பன் கூறியதாவது:
''ஆஸ்கர் விருது பெற்ற கொரிய திரைப்படமான 'பாரசைட்' 1999 விஜய் - நடித்து வெளியான 'மின்சாரா கண்ணா' படத்தின் நகல். திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில், நான் ஒரு சர்வதேச வழக்கறிஞரின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்வேன். எனது படத்திலிருந்து கதைக்களத்தை எடுத்துள்ளனர்.
தமிழில் நாங்கள் தயாரிக்கும் படங்களில் சில, அவர்களின் படங்களால் ஈர்க்கப்பட்டவை என்று அவர்கள் கண்டுபிடித்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், நாமும் அவ்வாறே செய்வது நியாயமானது. 'மின்சார கண்ணா' கதையை அப்படியே தங்கள் படத்தின் கதையாக நகல் எடுத்ததற்காக 'பாரசைட்' தயாரிப்பாளர்களிடமிருந்து இழப்பீடு கோர உள்ளோம். சமூக ஊடகங்கள் கதைத் திருட்டு உரிமை கோரல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டன. இப்படி அவர்கள் செய்வதும் ஒருவகையான வணிகம்தான்.
இவ்வாறு தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்தார்.
கே.எஸ்.ரவிகுமார் மகிழ்ச்சி
'மின்சார கண்ணா' படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசினோம். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த சர்ச்சையின் மூலம் எனது படத்திற்கு சர்வதேச அளவில் வெளிச்சம் கிடைக்கும். 'மின்சாரா கண்ணா படத்தின் கதை இன்னொரு படத்திற்கு உத்வேகமாக செயல்பட்டு, அப்படம் ஆஸ்கர் விருதைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், வழக்குத் தாக்கல் செய்வது தயாரிப்பாளரிடம் உள்ளது'' என்றார்.
இரு படத்தின் கதைகளும் என்ன?
விஜய்யுடன் ரம்பா, மோனிகா காஸ்டெலினோ மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்த 'மின்சாரா கண்ணா' திரைப்படத்தின் கதையும் 'பாரசைட்' கதையும் ஒரே களமாக அமைந்துள்ளது. 'மின்சார கண்ணா'வில் காசி (விஜய்) என்கிற இளைஞர் ஒரு பணக்காரப் பெண்ணின் வீட்டிற்கு ஓட்டுநராக நுழைகிறார். விரைவில், ஓட்டுநரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மறைமுக நோக்கத்துடன் ஒவ்வொருவராக பணக்காரர் வீட்டில் வேலைக்குச் செல்கின்றனர். இக்கதையில் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் போல நடித்து, அவர்கள் தங்கள் அடையாளங்களை ஒரு ரகசியமாகவே வைத்திருப்பர். கிட்டத்தட்ட அல்ல இதே கதைதான் 'பாரசைட்' கதையும்.
'பாரசைட்' கதையைப் பொறுத்தவரை அது ஒரு பிளாக் காமெடி வகை திரைப்படம். இது வர்க்கப் பிரிவும் சமூகப் பாகுபாடும் எவ்வாறு செல்வந்தர்கள் குறைந்த வாழ்வாதாரம் கொண்டவர்கள் மீது உணர்வற்றவர்களாக இருக்க வைக்கிறது என்பதை இத்திரைப்படம் காட்டுகிறது.
ஒரு சூப்பர்-பணக்கார குடும்பத்தின் வீட்டுக்கு ஒவ்வொரு ஊழியராக படிப்படியாக ஊடுருவுவதன்மூலம் கீழ்-வர்க்க குடும்பம் உயிர்வாழும் ஒரு கவர்ச்சியான கதைக்களனை இப்படம் கொண்டுள்ளது. இவ்விரு கதைத் தளங்களும் அவுட்லைனைப் பொறுத்தவரை ஒற்றுமையைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், 'பாரசைட்' திரைப்படம் உண்மையில் மிகவும் மாறுபட்ட படைப்பாகும், சினிமாவுக்கான கதை சொல்லல் முறையும் மற்றும் அழகியல் அடிப்படையில் மிகவும் வளமான திரைக்கதையைக் கொண்ட திரைப்படமாகும்.