

திருமணம் முடிந்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட யோகி பாபுவுக்கு, தங்கச் செயின் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார் தனுஷ்.
தற்போது கதையின் நாயகனாகவும், பல்வேறு படங்களில் காமெடியனாகவும் நடித்து வருபவர் யோகி பாபு. அவருக்கு நீண்ட நாட்களாகத் திருமணத்துக்குப் பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வந்தது. பிப்ரவரி 5-ம் தேதி திடீரென திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு. மஞ்சு பார்கவியுடன் நடந்த திருமணம் தொடர்பாக அவர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு சென்னையில் படங்களின் டப்பிங் பணிகளில் மட்டும் யோகி பாபு கவனம் செலுத்தினார். தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தில் நடிக்க திருநெல்வேலிக்குச் சென்றார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றபோது, யோகி பாபுவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
படக்குழுவினர் கேக் வெட்டி யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். படத்தின் நாயகன் தனுஷ், திருமணப் பரிசாக யோகி பாபுவுக்கு தங்கச் செயின் ஒன்றை அணிவித்துள்ளார். தனுஷின் இந்தச் செயலால் மிகவும் நெகிழ்ந்துவிட்டார் யோகி பாபு.
'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிவரை திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
தவறவிடாதீர்!