

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் நடிகர் ஜாக்கிசான்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நாடுகளுக்கும் மேலாக கரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பல்வேறு உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது இந்த கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முன்னணி நடிகரான ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜாக்கிசான் பதிவிட்டு இருப்பதாவது:
''அறிவியலும் தொழில்நுட்பமும்தான் இந்த நோய்க்கிருமியை வெல்ல முக்கியமானவை. என்னைப் போலவே பலரும் யோசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இதற்கான மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். இப்போது என்னிடம் ஒரு யோசனை உள்ளது. எந்த தனி நபரோ அல்லது அமைப்போ, யார் இதற்கு மருந்து கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு ஒரு மில்லியன் யுவானோடு நன்றி கூற விரும்புகிறேன்.
இது பணத்தைப் பற்றியது அல்ல. கூட்டம் நிறைந்த தெருக்கள் காலியாக இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ வேண்டிய வேளையில், சாகும் வரை என் சக மனிதர்கள் அந்தக் கிருமியுடன் போராடுவதைப் பார்க்க நான் விரும்பவில்லை''.
இவ்வாறு ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
ஒரு மில்லியன் யுவான் என்பது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்