

‘விநியோகஸ்தர்கள் நடிக்கவா வந்துள்ளனர்?’ என ‘தர்பார்’ நஷ்டம் குறித்துக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் டி.ராஜேந்தர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் ‘தர்பார்’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்தார்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், ரஜினி படம் என்பதால் முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இருந்தாலும், நாட்கள் போகப்போக படத்தின் வசூல் குறைந்தது. இதனால், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்மடைந்தனர்.
இதுகுறித்து ரஜினியைச் சந்தித்துப் பேச முயன்றபோது, அனுமதி கிடைக்கவில்லை. எனவே, ரஜினி தங்களைச் சந்திக்காவிட்டால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என விநியோகஸ்தர்கள் அறிவித்தனர்.
விநியோகஸ்தர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட டி.ராஜேந்தரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்து விட்டோம் என்ற கருத்தைத் தெரிவிக்கும்போது, அந்த விஷயத்தை ஆராய்ந்து பார்க்காமல், என்ன விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே, நஷ்டம் அடையாமல் நஷ்டப்பட்டு விட்டது போன்ற மாயையை விநியோகஸ்தர்கள் உருவாக்குவதாக சிலர் குற்றம் சாட்டுவதை, விநியோகஸ்தர் என்ற முறையில் நான் வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன்.
எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என விசாரித்துப் பாருங்கள். பாதிப்பு இல்லாமலா அத்தனை விநியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுவார்கள்? அவர்கள் நடிப்பதற்காகவா வந்துள்ளனர்? அவர்கள் நஷ்மடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலும் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் வந்து என்னையும், சங்கத்தில் உள்ளவர்களையும் சந்தித்தனர். ‘எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைப் பற்றி எடுத்த எடுப்பில் ‘வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ’ என நான் பேசவில்லை. ஏனென்றால், ரஜினிகாந்த் எனக்கும் இனிய நண்பர். அதனால், இந்த விஷயத்தில் எப்போது, எப்படி, என்ன விதத்தில் பேசவேண்டுமோ, அப்போது, அப்படிப் பேசுவேன்” எனத் தெரிவித்தார்.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...