

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற 'ஹெலன்' திரைப்படம் தமிழில் ரீமேக்காகிறது.
வினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'ஹெலன்'. கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக்காகிறது. இதில் அருண் பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கவுள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் நடிப்புக்குத் திரும்புகிறார் அருண் பாண்டியன். மேலும், தனது ஏ.பி நிறுவனத்தின் மூலம் இந்த ரீமேக்கை தயாரிக்கவும் உள்ளார்.
'ஹெலன்' ரீமேக்கை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்று (பிப்ரவரி 7) சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
'ஹெலன்' படத்தின் கதைக்களம்
பி.எஸ்சி நர்ஸிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்பது கனவு. ஆனால் ஹெலனின் தந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஹெலன் தன் காதலனுடன் ஒருநாள் பைக் ட்ரிப் சென்று விட்டு திரும்பும்போது போலீஸாரால் நிறுத்தப்படுகிறார். ஹெலனின் காதலன் குடித்திருந்ததாலும், ஹெல்மெட் அணியாததாலும் அவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் ஹெலனின் மீது கோபம் கொள்ளும் அவரது தந்தை அவளிடம் பேச மறுக்கிறார். இதனால் விரக்தி அடையும் ஹெலன் மாயமாய் மறைகிறாள். ஹெலனின் தந்தை எவ்வளவு தேடியும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ஹெலன் கிடைத்தாளா? அவள் எங்கே இருந்தாள் என்பதே படத்தின் மீதிக்கதை
தவறவிடாதீர்: