

தெலுங்கு 'பிக் பாஸ் 3' வெற்றியாளர் ராகுல் சிப்லிகஞ்ச் ரஜினியுடன் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டார். சர்ச்சையானதால் உடனடியாக நீக்கிவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவர் 168'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பாளராகவும், வெற்றி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ரஜினியின் லுக் எதுவுமே வெளியாகவில்லை. அனைத்திலுமே ரகசியம் காத்து வருகிறது படக்குழு. இதனிடையே தெலுங்கு 'பிக் பாஸ் 3' வெற்றியாளர் ராகுல் சிப்லிகஞ்ச், ரஜினியை 'தலைவர் 168' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார்.
அப்போது ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 'தலைவர் 168' படத்தின் லுக்கில் ரஜினி இருந்ததால், பலரும் அதைப் பகிரத் தொடங்கினார். கழுத்தில் ருத்திராட்ச மாலை, சிறிதாக முறுக்கிய மீசை என இந்த லுக் ரஜினி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
இந்தப் புகைப்படத்தால் ரஜினி கெட்டப் வெளியாகிவிட்டதாகக் கருதியுள்ளது படக்குழு. ரஜினியின் லுக் வைரலானதைத் தொடர்ந்து உடனடியாக ராகுல் சிப்லிகஞ்ச் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தை நீக்கிவிட்டார். படக்குழுவினர் தரப்பிலிருந்து அவரிடம் பேசியிருப்பதால், நீக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு 'மன்னவன்' என்ற பெயரில் 'தலைவர் 168' படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்தப் போஸ்டரில் ரஜினி இடம்பெற்றிருந்த லுக்கே, ராகுல் வெளியிட்டுள்ள படத்திலும் இருப்பதைப் பலரும் ஆச்சரியமாகப் பேசி வருகிறார்கள்.
தவறவிடாதீர்