

'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்துள்ளது.
'வேலைக்காரன்' படத்துக்குப் பிறகு 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வந்தார்கள்.
இந்தப் படத்தை தயாரித்து வந்த 24 ஏ.எம். நிறுவனம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்ததால், படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. இதனால், சிவகார்த்திகேயன் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இறுதியில், பைனான்சியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தப் படத்துக்கான தனது ஒட்டுமொத்த சம்பளத்தையும் விட்டுக் கொடுத்தார். ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமலேயே இருந்தது.
தற்போது, இதன் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போதே, இதில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்துவிட்டது என்று தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையுமே படக்குழு வெளியிடவில்லை.
இந்தப் படத்தில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்திருப்பதைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (பிப்ரவரி 3) மாலை 5 மணியளவில் படத்தின் தலைப்பை அறிவிக்கவுள்ளார் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் 'டாக்டர்' படத்திலும் இணைந்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். தற்போது ரவிக்குமார் - சிவகார்த்திகேயன் படத்திலும் இணைந்திருப்பதன் மூலம், இந்தப் படத்துக்கு இனி எவ்விதச் சிக்கலும் ஏற்படாது என நம்பப்படுகிறது.