சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய்?

சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய்?
Updated on
1 min read

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு சுதா கொங்கராவும் கதை சொல்லியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தனது அடுத்த படத்துக்கான கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் விஜய். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

இதில் உள்ள இயக்குநர்கள் பட்டியலில் சுதா கொங்கராவும் இணைந்துள்ளார். அவர் கூறியுள்ள கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிக்கட்டக் கதை விவாதத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் விஜய் - சுதா கொங்கரா இருவரும் ஈடுபடவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, விஜய் நடிக்கும் படத்தின் பணிகளை சுதா கொங்கரா கவனிப்பார் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in