

வி.ராம்ஜி
எத்தனை வருடங்கள் கடந்தாலும், சில படங்கள் தலைமுறை கடந்தும் மக்களால் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். அது குடும்பப் படமாக இருக்கலாம். ஆக்ஷன் படமாக இருக்கலாம். மாயாஜாலப் படமாக இருக்கலாம். காதலை உணர்த்தும் படமாகவும் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியொரு காதல் உணர்வை தியாகம் கலந்து உணர்வுபூர்வமாகச் சொன்னதில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து, தனித்துவமாகத் திகழ்கிறது ‘வாழ்வே மாயம்’.
ரீமேக் படங்களின் ஹீரோ என்று போற்றப்படுபவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி. இவரின் மூலம் ஏராளமான வேறு மாநிலப் படங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அந்தப் படங்களை தமிழுக்குத் தகுந்தது போல் கொடுப்பதில் அசகாயசூரர் இவர். அந்தக் காலத்திலேயே சிவாஜியை வைத்து பல ரீமேக் படங்கள் எடுத்து ஹிட்டடித்திருக்கிறார். அதேபோ, ரஜினியை வைத்து இவர் எடுத்த ‘பில்லா’, ‘தீ’, ‘விடுதலை’ முதலான படங்கள் ரீமேக் படங்கள்தான்.
கமலை வைத்தும் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கே.பாலாஜி. இதில் முக்கியமான படம்... காலத்தால் அழியாத படம்... காதல் காவியம் என்று போற்றப்பட்ட படம்... ‘வாழ்வே மாயம்’. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.
மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ராஜா. துடுக்குத்தனமும் விளையாட்டு குணமும் கொண்டிருப்பவன். ஒருநாள் விமானப் பணிப்பெண் தேவியைப் பார்க்கிறான். பார்த்ததும் காதல் கொள்கிறான். ஆனால், அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் மீது நல்ல அபிப்ராயமே இல்லை.
ராஜாவும் அவளைக் காதலிக்க எடுக்கும் திட்டங்களெல்லாம் எகனைமொகனையாகவே இருக்கின்றன. ராதா எனும் விலைமகளைக் கொண்டு காதலைச் சொல்லி ஆட்டம்போடுகிறான். இப்படியாக இருக்கும் வேளையில், ஒருவழியாக ராஜாவைக் காதலிக்கத் தொடங்குகிறாள் தேவி. எதிர்ப்புகளையெல்லாம் கடந்து, திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஒருகட்டத்தில், திருமணத்தை நிறுத்துவதற்கான முனைப்பு காட்டுகிறான் ராஜா.
‘உம் பின்னாடி எவ்ளோ சுத்தியிருப்பேன். என்னை நாயைவிட கேவலமா நடத்துனியே. அதுக்கு பழிக்குப்பழி வாங்கத்தான் காதலிக்கிற மாதிரி நடிச்சேன்; கல்யாணம் பண்றதுக்கும் சம்மதிச்சேன்’ என்று சொல்ல, தேவி அதிர்ந்து போவாள்.
ராஜா இப்படி திருமணத்தை நிறுத்தக் காரணம்... அவனுக்கு வந்திருக்கும் கேன்ஸர். இப்படியொரு நோய் வந்திருப்பது தேவியின் தோழி பேபிக்குத் தெரியும். தேவியின் நினைப்பில் இருந்து மீளமுடியாமல், ராஜா ராதாவின் வீட்டில் அடைக்கலமாவான்.
இவை எதுவும் தெரியாமல், அவனை ராதாவிடம் இருந்து மீட்டு வந்து திருமணம் செய்து கொள்ள முயற்சி மேற்கொள்வாள் தேவி. ஆனால் முடியாமல் போகும். ஒருபக்கம், ராஜாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர், ராஜாவின் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்.
ஒருகட்டத்தில், தேவிக்கும் அவரின் அண்ணனின் நண்பருக்கும் திருமணம் முடிவாகும். திருமணமும் நடந்தேறும். அப்போது, தோழி பேபியின் மூலம் உண்மைகள் தெரியவரும் தேவிக்கு. அதேபோல், ராஜாவின் குடும்பத்துக்கும் விஷயத்தைச்சொல்லுவார் டாக்டர். இருதரப்பில் இருந்தும் ராதாவின் வீட்டுக்கு ஓடிவருவார்கள்.
அங்கே... உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ராதாவுக்கு தாலி கட்டி முடித்திருப்பார். எல்லோரும் வந்த போது, ராஜாவின் உயிர் பிரியும். அவருடன் சேர்ந்து ராதாவும் இறந்துவிடுவார்.
படம் முடிந்து ரசிகர்கள் கனத்த இதயத்துடன் எழுந்து வந்தார்கள்.
ராஜாவாக கமல். தேவியாக ஸ்ரீதேவி. ராதாவாக ஸ்ரீப்ரியா. பேபியாக மனோரமா. அண்ணனாக ஜெய்சங்கர். அவரின் நண்பராக பிரதாப். டாக்டராக கே.பாலாஜி. மிகக்குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு காதல் காவியமே படைத்திருப்பார்கள்.
கமல், ஸ்ரீதேவியின் அழகும் நடிப்பும் கனக்கச்சிதம். அப்படியொரு பாந்தமான ஜோடி என்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு மிரட்டல். அவரின் பாடி லாங்வேஜும் வசன உச்சரிப்பும் மிகத்தெளிவான பெண் என்பதைக் காட்டும் வகையில் இருந்தன. மனோரமாவின் நடிப்பு வழக்கம்போல் மனதைத் தொட்டது. அம்பிகாவும் மிகச்சிறிய கதாபாத்திரத்தில், ஆனால் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்திருப்பார்.
தாசரி நாராயணராவின் கதைக்கு ஏ.எல்.நாராயணன் வசனம். மனிதர், பல இடங்களில் புகுந்து விளையாடியிருப்பார், தன் பேனாவால்! வழக்கமாகவே அழகனான கமல், இந்தப் படத்தில் பேரழகனாகக் காட்சி தருவார். பின்னாளில், இவர் கேன்ஸரால் உருக்குலைந்து அழகு மறைந்து போவதைக் காட்டவேண்டும் என்பதற்காகவே அப்படியொரு அழகில், முன்பாதியில் வந்தாரோ என்னவோ!
‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராதாவே’, ‘நீலவான ஓடையில்’, ‘மழைக்கால மேகம்’, ‘வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இன்றைக்கும் இரவு வேளையில் தமிழ் இசை ரசிகர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. அப்போதெல்ல்லாம், இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஆனால் படத்துக்கு இசை கங்கை அமரன். அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் கங்கை அமரன்.
‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘சட்டம்’, ஒருவிடுகதை ஒருதொடர்கதை’ போல் இந்தப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வெற்றிபெற்றன. பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர் கங்கை அமரன், இசையமைப்பாளர் கங்கை அமரன் என அவரின் பல முகங்களில், பல திறமைகளில்... இசையமைப்பாளர் என கொடி நாட்டிய படம் என ‘வாழ்வே மாயம்’ அமைந்தது.
‘வாழ்வே மாயம்’ திரைப்படமும் ஏ,பி.சி என மூன்று சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
1982ம் ஆண்டு வெளியானது ‘வாழ்வே மாயம்’. கே.பாலாஜியின் திருமண நாள் ஜனவரி 26. இந்தநாளில், தன் படங்களை ரிலீஸ் செய்வது அவர் வழக்கம். ‘வாழ்வே மாயம்’ படமும் ஜனவரி 26ம் தேதிதான் வெளியானது. அவர் படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு வரும் ராஜா, ராதா பெயர்கள், இந்தப் படத்தில் கமலுக்கு ராஜா என்றும் ஸ்ரீப்ரியாவுக்கு ராதா என்றும் சூட்டப்பட்டிருக்கும்.
படம் வெளியாகி, 38 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ‘நீலவான ஓடையில்’ நீந்திக்கொண்டே இருக்கிறது வெண்ணிலா.
‘வாழ்வே மாயம்’ மொத்தக் குழுவினருக்கும் வாழ்த்துகள்!