

காயத்திலிருந்து குணமாகி மீண்டது தொடர்பாக மஞ்சிமா மோகன் நம்பிக்கையூட்டும் பகிர்வு ஒன்றை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான படம் 'தேவராட்டம்'. இந்தப் படத்துக்குப் பிறகு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், திரையுலகில் தனக்கு வந்த வாய்ப்புகள் எதிலுமே மஞ்சிமா நடிக்காமல் இருந்தார். மேலும், கைத்தடியுடன் நடிக்க முயற்சி செய்யும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
தற்போது தனது காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்து வருகிறார். மீண்டும் நடிப்பு உலகிற்குத் திரும்பியிருப்பது தொடர்பாகவும், காயத்திலிருந்து மீண்டது தொடர்பாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மஞ்சிமா மோகன்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''எனக்குக் காயம்பட்டு அதிலிருந்து நான் குணமாகிக் கொண்டிருக்கிறேன் என்பது பலருக்குத் தெரியும். இன்னும் பல நடிகர்களுக்கு இதை விட மோசமாகக் காயம் பட்டுள்ளது. வலிமை, உறுதியோடு அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் எப்போதும் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதைப் பார்க்க எளிதானது போல் ஆகிவிட்டாலும் தனிப்பட்ட முறையில் நான் அனுபவிக்கும்போதுதான் அவர்கள் வெளியில் காட்டியதை விடக் குணமாகுதல் என்பதில் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அப்படி தைரியமாக மீண்டு வந்த அனைவருக்கும் என் வணக்கங்கள்.
ஆனால் இதோ என் கதை. (பொறுமையுடன் படிப்பவர்களுக்காக)
நான் காயமடைந்தபோது என் மனதில் ஓடிய முதல் எண்ணங்கள், என்னால் மீண்டும் நடக்க முடியுமா? என்னால் மீண்டும் வேலை செய்ய முடியுமா? எனக்கு என்றும் பிடித்த, என் கனவான நடனத்தை என்னால் தொடர முடியுமா? என்பவை தான்.
உண்மையில் என் மனதில் இதற்கெல்லாம் சாத்தியமில்லை என்றே பதில் தோன்றியது. நம்பிக்கை இழந்தேன், பயம் ஆட்கொண்டது. என் குடும்பமும் நண்பர்களும் என்னை ஊக்கப்படுத்தினாலும் என் மனதில் இந்தப் போராட்டத்தில் நான் தோற்றுக் கொண்டிருந்தேன்.
பின் என் நம்பிக்கை கீற்று எங்கிருந்து வந்தது? நான் உன்னை நம்புகிறேன். நீ குணமாகும் காலத்துக்கு ஏற்றார்போல வேலையைத் திட்டமிடலாம் என்று போனில் சொன்ன எனது இயக்குநரின் குரல் மூலமாக வந்தது.
அது என்னை யோசிக்க வைத்தது. அவரால் என்னை நம்பமுடியும் என்றால் என்னாலும் முடியும். அதனால் படுக்கையிலிருந்து எழுந்தேன். எனது வேலைக்காக நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன். மீண்டும் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்ட நாள் தான், எனது வலிமையை நான் உணர்ந்த நாள்.
நான் பயந்தேன், என்னை நம்பிக்கையின்றி சிலர் பார்த்தார்கள். ஆனால், நான் மீண்டும் பணிக்குச் சென்றேன். எனக்கு என் வேலை மிகவும் பிடிக்கும். அதனால் அதில் என் சிறந்த முயற்சியைத் தந்தேன். எனக்காக இல்லை என்றாலும் என் மீது நம்பிக்கை வைத்த அந்த மனிதருக்காக. அன்று படப்பிடிப்பு தளத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமிருந்தும் எனக்குக் கிடைத்த வரவேற்பு உண்மையில் ஒரு ஆசிர்வாதம்.
எல்லோரும் என்னை அக்கறையுடன் கவனித்தார்கள், நடக்க உதவினார்கள். ஷாட்டுக்கு நடுவில் ஓய்வெடுக்க உதவினார்கள். நாட்கள் கடந்தன, நான் சோர்வாக, பலவீனமாக உணர்ந்தாலும், செய்ய வேண்டிய வேலையைத் தொடர்ந்து செய்தேன். விரைவாகக் குணமாக ஆரம்பித்தேன். எனது கால்கள் உறுதியாயின. எனது வேலை மேம்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக, என் மீது எனக்கிருந்த நம்பிக்கை வளர்ந்தது.
இப்போது நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, 100 சதவீதம் குணமாகிவிட்டேன். எனது மனதில் பயமும், சந்தேகமும் இல்லை. நான் நம்பிக்கை இழந்தபோதும் என் மீது என்றும் நம்பிக்கை இழக்காத சிலரால் தான் இது சாத்தியமானது.
நான் என்னைத் தள்ளிக்கொண்ட பள்ளத்திலிருந்து என்னை மீட்டதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த நன்றியுணர்வுடன் இந்த புகைப்படத்தைப் பகிர்கிறேன். என் மீது நிபந்தனையற்ற நம்பிக்கை வைத்ததற்கு நன்றி''.
இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.