

வடிவேலு இல்லையென்றால் சினிமா இல்லை என்ற நிலைக்கு அவர் வளர்ந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
சேரன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான படம் ‘பாரதி கண்ணம்மா’. இந்தப் படத்தில் பார்த்திபன் - வடிவேலு கூட்டணியின் காமெடி காட்சிகள், வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும். இந்தப் படத்தில் மட்டுமல்ல... ‘குண்டக்க மண்டக்க’, ‘வெற்றிக்கொடி கட்டு’ என இவர்கள் இணைந்த எல்லா படங்களிலுமே காமெடி தூள் பறக்கும்.
இந்நிலையில், ‘இந்து தமிழ்திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டியில், வடிவேலு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பார்த்திபன்.
“ ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் முழு காமெடி ட்ராக்கையும் நான்தான் சேரனிடம் கூறினேன். அந்தப் படத்தின் கதை, மேல்சாதி வீட்டுப் பெண்ணை, கீழ்சாதி வீட்டுப் பையன் காதலிப்பதாக அமைந்திருக்கும். ‘இந்தப் படம் சீரியஸாக இருக்கிறது. எனவே, கொஞ்சம் காமெடி சேர்க்கலாம்’ என்று சொன்னேன். ஆனால், காமெடி சேர்த்தால் கதை பாதிக்குமோ என்ற பயம் சேரனுக்கு இருந்தது.
‘ஒத்த செருப்பு’ படத்தில் நான் அரை மணநேர காமெடி காட்சிகளை நீக்கிவிட்டேன். காரணம், அதில் காமெடி காட்சிகள் மேலோங்கினால், கதை பாதிக்கப்படும் என நான் நினைத்ததைப் போலவே, ‘பாரதி கண்ணம்மா’ படத்தின்போது சேரனும் நினைத்தார்.
ஆனால், ‘காமெடி காட்சிகள் சேர்த்தால்தான் இந்தப் படத்தில் நான் நடிப்பேன்’ என சேரனிடம் சொன்னேன். அதன்படி சேர்க்கப்பட்ட காமெடி காட்சிகள், உலக அளவில் பேசப்பட்டன.
அடுத்து ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்திலும் காமெடி வேண்டுமென சேரனிடம் சொன்னபோது, அவரே அதை யோசித்து எழுதினார். ஆனாலும், அனேகமான காமெடி காட்சிகள், நான் எழுதியவைதான். இந்தக் காட்சிகளை, வடிவேலுவைத் தவிர வேறு ஒரு நடிகரிடம் தந்திருந்தால், அந்தக் கதாபாத்திரம் இந்த அளவுக்குப் பிரதிபலித்திருக்க வாய்ப்பில்லை. உலக அளவிலான நடிகர் வடிவேலு என்பதில் எந்த மாறுபட்டக் கருத்தும் இல்லை. அவரின் உற்றுநோக்கும் திறன், அபரிமிதமான ஒன்று.
நாகேஷுக்கு அடுத்தபடியாக, காமெடி உலகில் வடிவேலுவைத்தான் கூற முடியும். அவர் மிகவும் திறமையான நடிகர். அவரை நம்பி சிறிய விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்குச் சென்றுவிடலாம். ‘குண்டக்க மண்டக்க’, ‘உன்னருகே நானிருந்தால்’ படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்துமே படப்பிடிப்புத் தளத்தில் பேசி உருவாக்கியவைதான்.
ஒருகட்டத்தில், மிகப்பெரிய ஹீரோவாகிவிட்டார் வடிவேலு. அவர் இல்லையென்றால் சினிமா இல்லை என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டார். நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் அருமையாக இருக்கும். அதற்கு வாய்ப்பு கிடைத்தால், மீண்டும் அவருடன் கட்டாயம் நடிப்பேன்” எனத் தெரிவித்தார் பார்த்திபன்.
வெ.மணிகண்டன்