

'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குநர் மித்ரன்.
சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மித்ரன்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை மித்ரன் இயக்கியிருந்தார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்தார்.
இந்தப் படத்துக்கு விமர்சனரீதியாக வரவேற்பு இருந்தாலும், வசூல்ரீதியாகப் பெரிதாக சோபிக்கவில்லை. இந்தப் படத்தின் கதை சர்ச்சை தொடர்பாக எழுத்தாளர் சங்கத்துக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் மோதல் உருவெடுத்துள்ளது.
இதனிடையே தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் மித்ரன். 'தேவ்' படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு, ’ஹீரோ’ படத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே ஒப்பந்தமாகிவிட்டார் மித்ரன். தற்போது 'ஹீரோ' படம் வெளியாகிவிட்டால், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
இப்படத்தில் இரட்டை வேடங்களில் கார்த்தி நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக கார்த்தி தன் முடியை நீளமாக வளர்த்திருப்பதால், ஒரு கேரக்டரை அந்த லுக்கில் வடிவமைத்துள்ளார் மித்ரன். அந்தக் கேரக்டரின் படப்பிடிப்பை மட்டும் விரைவில் தொடங்கி முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, கார்த்தி முடியைக் குறைத்தவுடன், மற்றொரு லுக்கின் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளார் மித்ரன். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. கார்த்தியுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு விரைவில் தொடங்கவுள்ளது.