

'ஹீரோ' கதை சர்ச்சை தொடர்பாக இயக்குநர் மித்ரன் பல்வேறு கேள்விகளைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எழுப்பியுள்ளார்.
சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
என் கதையைத் திருடி இயக்குநர் மித்ரன் 'ஹீரோ' படத்தை எடுத்துவிட்டார் என உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். படம் வெளியாகிவிட்டாலும், கதை யாருடையது என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. நேற்று போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய விரிவான கடிதம் வெளியானது. இது இயக்குநர் மித்ரனை மிகவும் காயப்படுத்துவதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 24) பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் மித்ரன் எழுத்தாளர் சங்கத்துக்கு தான் எழுதிய இரண்டு கடிதங்களையும், பாக்யராஜ் தனக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இயக்குநர் மித்ரன் பேசியதாவது:
''இந்தப் படத்தின் கதையை நான், பொன்.பார்த்திபன், ஆண்டனி பாக்கியராஜ் மற்றும் சவரிமுத்து நால்வரும் சேர்ந்துதான் எழுதினோம். முக்கியமான படமாக இருக்கும் என்றுதான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இந்தக் கதையின் கரு எப்படி யோசித்தோம் என்றால், நல்ல மார்க் வாங்கிய மாணவன் இறந்து போகும்போது சர்ச்சையாகிறது. அதைப் பற்றி விவாதிக்கிறோம்.
அதேவேளையில், ஃபெயிலான மாணவர்கள் இறந்து போகும்போது அதற்கான ரியாக்ஷன் அந்த அளவுக்கு இல்லை. யார் இவர்களை ஃபெயிலானவர்கள் என முடிவு செய்வது என்ற கருவைக் கொண்டுதான் இந்த 'ஹீரோ' கதையமைப்பைத் தொடங்கினோம். இப்போதுதான் மக்களிடையே படம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது. அரையாண்டுத் தேர்வு இப்போதுதான் முடிவடைந்துள்ளது.
'ஹீரோ' கதை விவகாரம் தொடர்பாக நான் எந்தவொரு ஒத்துழைப்புமே அளிக்கவில்லை என்று எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியான கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. ஆகையால், என்னுடைய தரப்பில் என்ன நடந்தது என்பதைக் கூறவே வந்துள்ளேன். 21-11-2019 அன்று என்னை அழைத்து ஒரு மீட்டிங் நடத்தினார்கள். என்னுடைய கதையும், போஸ்கோ பிரபு என்பவருடைய கதைச் சுருக்கமும் ஒரே மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள். நான் எனது எழுத்தாளர்களுடன்தான் சென்றேன்.
இரண்டு கதையும் ஒரே மாதிரி இருக்கிறது. போஸ்கோ பிரபு தன் கதையை 2017-லிலேயே பதிவு செய்துவிட்டார். ஆகையால் இவருக்கு நிவாரணமாகப் பணம் அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள். எங்கள் இருவருக்கும் எந்தவொரு முகாந்திரமும் இல்லை. என்னை மாதிரியே ஒருவர் யோசித்தார் என்பதற்காக ஏன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு இன்றுவரை பதில் வரவே இல்லை.
நானும், எனது எழுத்தாளர்களும் 446 நாட்கள் உட்கார்ந்து பணிபுரிந்துள்ளோம். அப்போது பேசிக்கொண்ட ஒட்டுமொத்தக் கதை விவாதமும் எங்களிடம் ஆடியோ ஃபைலாக இருக்கிறது. அப்போது எழுதிய வசனங்கள் எப்படியெல்லாம் மாறியுள்ளன என்பது முழுமையாக உள்ளது. யாரெல்லாம் எங்களுடைய கதை விவாதத்துக்கு வந்துள்ளார்கள் என்பதற்கான ஆவணமும் இருக்கிறது. இதை எழுத்தாளர் சங்கத்திலும் சொல்லிவிட்டேன்.
இதுவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர் சங்கத்திலிருந்து எந்தவொரு கடிதமும் வரவில்லை. பாக்யராஜ் சாருடைய கடிதம் மட்டுமே வந்துள்ளது. இதுவரை எழுத்தாளர் சங்கத்தின் தீர்மானம் இதுதான் என்று எந்தவொரு கடிதமும் வரவில்லை. புகார்தாரருக்கு மட்டும் கடிதம் கொடுத்துள்ளார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.
மேலும், 22-11-2019 அன்று எழுத்தாளர் சங்கத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதினேன். அதில் கதைச் சுருக்கத்தை மட்டுமே வைத்து எந்தவொரு முடிவையும் எடுத்துவிட முடியாது. என் ஒட்டுமொத்தக் கதையையும் பிரித்துப் படியுங்கள் என்று தெரிவித்தேன். அவ்வாறு படிக்க எழுத்தாளர் சங்கம் மறுத்துவிட்டார்கள். கதைச் சுருக்கமே போதும் என்று தெரிவித்துவிட்டார்கள். கதைச் சுருக்கமே போதும் என்றால் முழு திரைக்கதையையும் பதிவு பண்ணுவது எதற்கு என்று தெரியவில்லை. கதைச் சுருக்கத்தை மட்டும் வைத்து முடிவெடுப்பேன் என்பது சரியாகப் படவில்லை.
டிசம்பர் 7-ம் தேதி பெப்சி அமைப்பை அழைத்து 'ஹீரோ' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள். இது தொடர்பான மீட்டிங்கின் போது, தலைவர் ஆர்.கே.செல்வமணி, போஸ்கோ பிரபு, நான் மற்றும் எனது எழுத்தாளர்கள் என அனைவருமே இருந்தோம். அப்போது தான் 'ஹீரோ' படத்தின் முழு திரைக்கதையையும் கொடுத்தேன். அதுவரை எழுத்தாளர் சங்கத்தில் முழு திரைக்கதையும் கிடையாது. ஆனால், எழுத்தாளர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் முழு திரைக்கதையும் படித்த பின்பு என்று உள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. இப்போது வரை திரைக்கதையைப் படிக்கவே இல்லை
நான் அனுப்பிய 2 கடிதங்களையுமே எழுத்தாளர் சங்கத்தில் முதலில் வாங்கிக் கொள்ளவில்லை. பின்பு ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பினேன். மேலும், தயாரிப்பாளர் இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. நான் 10 லட்ச ரூபாய் டெபாசிட் பண்றேன் என்று பெப்சி அமைப்பின் பெயரில் பண்ணினார். இன்றைக்கு வரை இது தொடர்பான மீட்டிங் நடைபெறாததால், அந்த 10 லட்ச ரூபாய் காசோலையைத் திரும்ப வாங்கிக் கொண்டார்கள். ஆனால், எழுத்தாளர் சங்கக் கடிதத்தில் 18 பேர் கொண்ட குழு முடிவெடுத்தது என்று போட்டுள்ளார்கள். அது எப்போது நடந்தது என்று தெரியவில்லை. எப்படி அந்தக் குழு உருவானது, எப்போது அந்த முடிவு எடுத்தார்கள் எனத் தெரியவில்லை.
இது திருட்டுக் கதை என்று எழுத்தாளர் சங்கம் என்னிடம் சொல்லவே இல்லை. ஆனால், இன்று திருட்டுக் கதை என்று வரும் போது பெரிய மனவருத்தம் இருக்கிறது. மேலும், இவ்வளவு ஒத்துழைப்பு அளிக்கும் போது, நான் ஒத்துழைப்பே அளிக்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது மேலும் மனவேதனையைத் தருகிறது.
இந்தப் படத்தின் கதையை எதிலிருந்து பேச ஆரம்பித்து, எப்படிக் கொண்டு வந்துள்ளோம் என்பது முழுமையாகக் கதை விவாதத்தின் போது உள்ள ஆடியோ பதிவு இருக்கிறது. அனைத்துக்கும் மேல் படமே இருக்கிறது. படத்தைப் பார்த்து போஸ்கோவின் திரைக்கதையையும், எங்களுடைய திரைக்கதையையும் படித்தால் விஷயம் தெரிந்துவிடப் போகிறது. இப்போது கூட நீதிமன்றம் செல்லாமல் சுமுகமான கருத்துக்கு வந்தால் சந்தோஷம் தான்''.
இவ்வாறு இயக்குநர் மித்ரன் பேசினார்.