

'ஹீரோ' கதை சர்ச்சை தொடர்பாக மித்ரனுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
என் கதையைத் திருடி இயக்குநர் மித்ரன் 'ஹீரோ' படத்தை எடுத்துவிட்டார் என உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு, தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். படம் வெளியாகிவிட்டாலும், கதை யாருடையது என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. நேற்று போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய விரிவான கடிதம் வெளியானது. இது இயக்குநர் மித்ரனை மிகவும் காயப்படுத்துவதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 24) பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் மித்ரன் எழுத்தாளர் சங்கத்துக்கு தான் எழுதிய இரண்டு கடிதங்களையும், பாக்யராஜ் தனக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில் மித்ரனுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''நேற்று எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்திற்கு மரியாதை தந்து தாங்கள் வந்து ஒத்துழைப்பு தந்ததற்கு எனது மனமார்ந்த நன்றி. நேற்று நடந்த விவாதத்தின்போது நீங்கள் "நான் கதாசிரியர்களை மதிக்கிறேன். அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுப்பதைக் கடமையாக நினைக்கிறேன்" என்று கூறியது சங்கத்து அங்கத்தினர் அனைவரையும் பெரிதும் கௌரவப்படுத்தியது.
புகாருக்காக உங்களிடம் நாங்கள் கேள்வி எழுப்பியது, உங்களுக்கு எவ்வளவு மனக்காயத்தை உண்டாக்கியது என்பதை உங்கள் பேச்சிலிருந்து உணர முடிகிறது.
ஒரே ஒரு நிமிடம் பொறுமையாக தாங்கள் சிந்தித்தால், கதையைப் பறிகொடுத்தவருக்கும் அதே காயம் இருப்பது உங்களுக்குப் புரியக்கூடும். அதற்கு நான் காரணமல்ல என்று உங்கள் தரப்பில் கூறினாலும், அவர் யோசித்த அதே விஷயம் தங்கள் கதையின் மையக் கருத்தாக இருப்பதை மறுக்க முடியாது.
"தங்கை - அவளது கண்டுபிடிப்பு - வில்லன் அதை மறைத்து மோசடி செய்து மாற்றுதல் - அதனால் தங்கை தற்கொலை - பின் வில்லன் செய்த தவறை ஹீரோ அம்பலப்படுத்துதல்" - இவ்வளவு ஒற்றுமைகளும் இருப்பதால், சங்க உறுப்பினர்கள் தவிர்க்க முடியாமல் மனம் ஒத்து ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளதை தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை.
நான் தவறு செய்யவில்லை என்ற உங்கள் வாதத்தை ஏற்கிறோம். ஆனால், புகார் கொடுத்த ஒரு எழுத்தாளர் யோசித்து, சங்கத்தில் உங்களுக்கு முன்பே அவர் பதிவு செய்த விஷயம், உங்கள் கதையிலும் வந்துள்ளதை நீங்கள் அனுப்பிய உங்கள் கதைச் சுருக்கத்திலேயே இருக்கிறது. அதை நீங்கள் மறுக்க முடியாது.
'IGNORANCE IS NOT AN EXCUSE' தங்களுக்குத் தெரியாமல் நடந்திருந்தாலும் தவறு நடந்துள்ளது. தங்களுக்குப் புரிகிறதல்லவா...?
தாங்கள் மூன்று கதாசிரியர்களை வைத்து விவாதித்துதான் இந்தக் கதையைப் படமாக்கியதாகக் கூறினீர்கள். அதன்படி நீங்கள் ஏற்கெனவே விவாதித்த மூன்று கதாசிரியர்களுடன் இவரையும் நான்காவதாகச் சேர்த்து அவர்களுக்குத் தந்த அதே ஊதியம் ரூ.10 லட்சத்தை இவருக்கும் தர வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்ட சக எழுத்தாளருக்கு, ஒரு நிவாரணமாக நீங்கள் உதவியதாகப் பதிவு செய்கிறேன். பெரிய மனதுடன் சங்கத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். தங்களது பட வெற்றிக்கு முன்கூட்டியே எனது நல்வாழ்த்துகள் நன்றி''.
இவ்வாறு மித்ரனுக்கு எழுதிய கடிதத்தில் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் நகலை சிவகார்த்திகேயனுக்கும் பாக்யராஜ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.