

விழாக்களில் பேசுவதற்கு முன் அனுமதி வாங்க வேண்டியதுள்ளது என்று கிண்டல் தொனியில் ராதாரவி பேசியுள்ளார்.
யூடியூப் தளத்தில் மிகவும் பிரபலமான பக்கம் 'பரிதாபங்கள்'. இதில் கோபி - சுதாகர் இருவரும் அரசியல்வாதிகள், நிகழ்வுகள் தொடர்பாக செய்யும் கிண்டல் வீடியோக்கள் தொடர்ச்சியாக ட்ரெண்டிங் ஆவதுண்டு.
தற்போது கிரவுட் ஃபண்டிங் முறையில் சினிமா தயாரிப்பு நிறுவனமான 'பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'ஹே மணி கம் டுடே Go டுமாரோ' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி மற்றும் யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது:
"நான் இளமையாக இருக்கக் காரணம் என்னவென்றால், வீட்டிற்குள் வயதானவரை எப்போதும் உள்ளே சேர்ப்பதில்லை. வயதானவர் என்றவுடன் ஆட்களைச் சொல்லவில்லை. வயதான எண்ணங்களைச் சொல்கிறேன்.
இந்த விழாவுக்கு வந்து பத்திரிகை வைக்கும் போது, என்னடா இது 'பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்' என்று வைத்துள்ளீர்கள் எனக் கேட்டேன். புதுமையாக இருக்கட்டுமே என்று சொன்னார்கள். இந்தப் படத்துக்கு இவ்வளவு பேர் பணம் போட்டிருப்பவர்களைப் பாராட்டுகிறேன். இதைப் பார்க்கும்போது நானும் யூடியூப் சேனம் ஆரம்பிக்கலாமா என்று எண்ணத்தில் இருக்கிறேன். இப்போது நல்ல வியாபாரமாக இருக்கிறது. இந்த யூடியூபால் நன்மை செய்வதை யாரும் பார்ப்பதில்லை. தீமைகளை மட்டுமே பார்ப்பதால் சில சமயங்களில் எரிச்சலாக இருக்கிறது.
இப்போது எல்லாம் டிவி சீரியல் போட்டு நம்மைக் கெடுத்துவிட்டார்கள். நாங்கள் படத்தில் பண்ணியதை எல்லாம் இப்போது சீரியலில் பெண்கள் செய்கிறார்கள். அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்பத்தைக் கெடுப்பதற்கே இருக்கும். இதெல்லாம் நாங்கள் படத்தில் செய்தோம். இதைப் பற்றி இப்போது பேசினோம் என்றால், 'ராதாரவி ஒழிக.. பெண்களைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார்' என்பார்கள். விழாக்களுக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போதே, விலங்குகள் நல அமைப்பு, பெண்கள் அமைப்பு ஆகியவற்றில் எல்லாம் அனுமதி வாங்க வேண்டியதாகவுள்ளது".
இவ்வாறு ராதாரவி பேசினார்.