

'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் 'குற்றம் 23'. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் அறிவழகன் ஈடுபட்டு வந்தார்.
முதலில் நயன்தாரா நடிக்கவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் அறிவழகன். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நாயகனை முன்வைத்துக் கதை எழுதத் தொடங்கினார். தற்போது அந்தக் கதையில் அருண் விஜய் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை 'கொரில்லா' படத்தைத் தயாரித்த ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவும் இந்தப் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜ் மற்றும் எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.