

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 11-ம் தேதி மீண்டும் 'பாட்ஷா' படத்தை வெளியிட சத்யா மூவிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் 1995-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வெளியான படம் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், தேவன், விஜயகுமார், ஆனந்த் ராஜ், சரண் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவா இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை சத்யா மூவிஸ் தயாரித்தது.
மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஒரு வருடத்துக்கும் அதிகமாக கிட்டத்தட்ட 15 மாதங்கள் வரை திரையரங்கில் ஓடியது. ரஜினி ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த படம் இது. மேலும், இந்தப் படம் எப்போது எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறதோ, அப்போது எல்லாம் இணையத்தில் கொண்டாடி மகிழ்வார்கள்.
இதனிடையே, 'பாட்ஷா' படத்தைப் புதிதாக டிஜிட்டலுக்கு மாற்றியது தயாரிப்பு நிறுவனம். இதுவும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானதும் ரஜினிகள் கொண்டாடித் தீர்த்தார்கள். தற்போது, இந்தப் படத்தை ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சத்யா மூவிஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் "ரஜினிக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' கொடுத்திருப்பதாகவும் மற்றும் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலும் டிசம்பர் 11-ம் தேதி 'பாட்ஷா' திரைப்படம் குறிப்பிட்ட ஊர்களில் உலக அளவில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளது.