

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார் என்று வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிய இந்தப் படம், இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்தார். தமிழிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மறுபடியும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதையும் போனி கபூரே தயாரிக்கிறார். இது எச்.வினோத்தின் சொந்தக் கதையாகும். இந்தப் படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 10-ம் தேதி இதன் பூஜை நடைபெற்றது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை இறுதி செய்யப்பட்டதும், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. தற்போது அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித்துக்கு வில்லனாக இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ‘இதுவரை என்னிடம் யாரும் இதுகுறித்துப் பேசவில்லை. நான் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என அவர்களுக்குத் தோன்றினால், என்னிடம் பேசுவார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.
‘வலிமை’ படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே வடிவேலு, நஸ்ரியா ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. ஆனால், விசாரித்தபோது அதில் உண்மையில்லை எனத் தெரிந்தது. அதில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, தற்போது ‘பொம்மை’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரே தயாரிக்கும் இந்தப் படத்தை, ராதாமோகன் இயக்குகிறார். ‘மான்ஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து இதிலும் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.