

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
முதலில் இந்தப் படத்தை 24 ஏ.எம் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. பின்னர், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நவம்பர் 8-ம் தேதி இந்தப் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
'ஹீரோ' படத்தினை முதலில் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிப்பதாக இருந்துள்ளது. அப்போது டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார் ஆர்.டி.ராஜா. ஆனால், அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. தற்போது 'ஹீரோ' படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு கை மாற்றியுள்ளது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ்.
இதனால் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் படங்கள் அனைத்தையும் மேற்கோளிட்டு இடைக்காலத் தடை பெற்றுள்ளது டி.எஸ்.ஆர் பிக்சர்ஸ். இதில், 'ஹீரோ' படம் தொடர்பாக 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் வெளியிட்ட ட்வீட்கள் அனைத்தையும் தங்களுடைய மனுவில் இணைத்து, அவர்களுக்கும் 'ஹீரோ' படத்துக்குச் சம்பந்தமுள்ளது எனத் தங்களுடைய மனுவில் தெரிவித்துள்ளது.
இதனால், 'ஹீரோ' வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் 'சிவகார்த்திகேயன் - ரவிக்குமார்' கூட்டணியில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்ஷன் படமும் இந்த இடைக்காலத் தடையில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிக்கலால் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகவிருந்த படங்களின் நிலை என்னவாகும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து 'சிவகார்த்திகேயன் - ரவிக்குமார்' படத்தையும், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தையும் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.