

தான் நடிக்க உள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் விஷ்ணு விஷால்.
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'ஜகஜால கில்லாடி'. அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. பல்வேறு படங்கள் வெளியாவதால் சரியான வெளியீட்டுத் தேதிக்காக படக்குழு காத்திருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் விஷ்ணு விஷால். இந்தப் படத்துக்கு 'எஃப்.ஐ.ஆர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்' என்று அர்த்தம் என படக்குழு குறிப்பிட்டது .
சுஜாதா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த இந்தப் படத்துக்குப் பிரம்மாண்டமாகப் படப்பூஜை போடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பைனான்ஸ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தகவல் வெளியானது. இறுதியில், இந்தப் படத்தை தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்க முடிவு செய்துள்ளார் விஷ்ணு விஷால். இது தொடர்பான அறிவிப்பையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். கருணாகரன், 'யூடியூப்' பிரசாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து விக்ராந்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம், 'இன்று நேற்று நாளை 2', 'ஜெர்ஸி' தமிழ் ரீமேக், 'ஜீவி' இயக்குநரின் அடுத்த படம், 'காடன்', வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் படம் என பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் விஷ்ணு விஷால்.