

'யோஹன்; அத்தியாயம் ஒன்று' மற்றும் 'ஜோஷ்வா: இமை போல் காக்க' ஆகிய படங்கள் ஒன்று தான் என்று வெளியான செய்திக்கு கெளதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கத் தொடங்கப்பட்ட படம் 'யோஹன்: அத்தியாயம் ஒன்று'. படப்பிடிப்பு தொடங்கப்படாமலே கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது. அந்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் மாற்றித் தான் 'ஜோஷ்வா: இமை போல் காக்க' என்ற படத்தை கெளதம் மேனன் படமாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியானது.
வருண் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். நேற்று (நவம்பர் 2) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 2020-ம் ஆண்டு காதலர் தின வெளியீடு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படம் தொடர்பாக கெளதம் மேனன் தனது ட்விட்டர் பதிவில், "என்னுடைய ஹீரோ வருணுடன் ஒரு முழுமையான ஆக்ஷன் படத்தை எடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன், அவர் சில ஸ்டைலிஷான ஆக்ஷன் காட்சிகளை முடித்து விட்டு இன்னும் நிறையச் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்.
என்னுடைய ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. ஜோஷ்வா படக்குழுவினருக்கு நன்றி. என்னுடைய பார்வையை உணர்ந்ததிற்கும் ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ பட வெளியீட்டுக்கும் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அவர் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைப் பார்த்து விட்டுப் பிடித்திருப்பதாகக் கூறினார், ஒன்றாகச் சேர்ந்து பணிபுரியலாம் என்று தீர்மானித்தோம். இன்னும் நிறைய அறிவிப்புகள் வருகின்றன. ‘ஜோஷ்வா’ படம் ’யோஹன்’ படமல்ல, ஆனால் அதற்கு இணையாகப் பெரிய தயாரிப்பாளர் தேவைப்படும் ஒரு பெரிய படம்” என்று தெரிவித்துள்ளார்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'ஜோஷ்வா' ஆகிய படங்கள் குறித்து ட்வீட் செய்ததால், பலரும் 'துருவ நட்சத்திரம்' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கெளதம் மேனன் "என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் கலைவடிவமான இந்தப் படம் இல்லாமல் இந்த சீஸன் முடிந்து விடாது. விக்ரமுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம் . அடுத்த 60 நாட்களில் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து 'துருவ நட்சத்திரம்' வெளியீட்டுக்குத் தயாராகும்" என்று தெரிவித்துள்ளார்.