

‘வலிமை’ படத்தில் அஜித்தின் தங்கையாக நஸ்ரியா நடிக்கிறார் என்று பரவிய செய்தி பொய்யானது எனத் தெரியவந்துள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிய இந்தப் படம், இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்தார். தமிழிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மறுபடியும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதையும் போனி கபூரே தயாரிக்கிறார். இது எச்.வினோத்தின் சொந்தக் கதையாகும். இந்தப் படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 10-ம் தேதி இதன் பூஜை நடைபெற்றது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை இறுதி செய்யப்பட்டதும், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. தற்போது அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகையும், நடிகர் ஃபஹத் ஃபாசிலின் மனைவியுமான நஸ்ரியா, இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. அஜித் தங்கையாக அவர் நடிக்கிறார் என்று செய்தி பரவிய நிலையில், இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, அந்தச் செய்தி பொய்யானது எனத் தெரியவந்துள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நஸ்ரியா, திருமணத்துக்குப் பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். ஆனால், கடந்த வருடம் முதல் தேர்ந்தெடுத்து சில மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.