Published : 28 Oct 2019 08:08 PM
Last Updated : 28 Oct 2019 08:08 PM

இதர படங்களுடன் தன் படங்கள் ஒப்பீடு? - இயக்குநர் அட்லி விளக்கம்

இதர படங்களுடன் தனது படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவது தொடர்பாக இயக்குநர் அட்லி விளக்கமளித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'பிகில்' படத்தின் இயக்குநர் அட்லி. இதற்கு முன்பாக 'ராஜா ராணி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுமே 'மெளன ராகம்', 'சத்ரியன்' மற்றும் 'அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்களின் தழுவல் என்றே பலரும் விமர்சித்தார்கள்.

அதே போல், 'பிகில்' படத்தைப் பார்த்துவிட்டு 'சக் தே இந்தியா' உள்ளிட்ட பல படங்களிலிருந்து சில காட்சிகளை எடுத்து ஒரு படமாக உருவாக்கியுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் ஃபுட்பால் சம்பந்தப்பட்ட காட்சிகளை 'பீலே' மற்றும் இணையத்தில் ஒருவர் ஃபுட்பால் ஆடும் வீடியோ ஆகியவற்றை அப்படியே தழுவி எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

இந்த ஒப்பீடு தொடர்பாக இயக்குநர் அட்லி, “நான் பார்க்கும் ஒவ்வொரு படமும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால் 2000 படங்களை நான் ஒப்பிட வேண்டும். என்னுடைய தாக்கங்கள் பலதரப்பட்டவை, அவை படங்களால் மட்டும் ஏற்படுவதில்லை.

ஒரு படத்தை நீங்கள் உண்மையாக எழுதியிருந்தால் அதை உங்கள் படம் என்று எண்ணுவேன். மக்கள் ஏதாவது சொல்வார்களே என்ற காரணத்தால் அதே வகையைச் சேர்ந்த வேறு படங்களுடன் ஒப்பிடுவது பாதுகாப்பற்றத்தன்மை. எனக்கு அந்த பாதுகாப்பற்ற தன்மை இல்லை. இந்த படத்தின் உள்ளடக்கம் என்னுடையது என்று உணர்கிறேன்.

ஆம், நான் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன், எனக்கு அவை பிடித்தும் இருக்கிறது. ஆனால் என்னுடைய படத்தின் உள்ளடக்கம் அவற்றின் பாதிப்பில் உருவானதல்ல” என்று தெரிவித்துள்ளார் அட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x