

விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. கணியன் பூங்குன்றன் என்ற துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தில் விஷால் நடித்தார்.
விஷால் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்த இந்தப் படத்தில், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ், சிம்ரன், ஜான் விஜய், வின்சென்ட் அசோகன், ஷாஜி சென், ஜெயப்பிரகாஷ், அஜய் ரத்னம், தலைவாசல் விஜய், ரவிமரியா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைத்தார். விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
எனவே, இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றுகிறார்.
முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா இரண்டாம் பாகத்திலும் நடிக்க, அவருடன் இணைந்து ரகுமான் மற்றும் கெளதமி இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார்.
உதயநிதியை வைத்து மிஷ்கின் இயக்கிவந்த ‘சைக்கோ’ படம் முடிந்துவிட்டது. அதேசமயம், சுந்த.சி இயக்கத்தில் விஷால் நடித்துவந்த ‘ஆக்ஷன்’ படமும் முடிவடைந்துவிட்டது. எனவே, அடுத்த மாதம் (நவம்பர்) ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, லண்டனில் தொடங்க இருக்கிறது.