

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் சமீப காலமாக புதிய படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளன. இதைத் தொடர்ந்து அவற்றுக்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் போர்க்கொடி எழுப்பியுள்ளது. புதிய படங்களின் டிரெய்லர், பாடல்கள், காமெடிக் காட்சிகள் ஆகியவற்றை தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கவேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். ஒரு படம் தயாராகும் போதே, அப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதன் மூலம் ஒரு பெரிய தொகை தயாரிப்பாளருக்கு வந்து சேரும். ஆனால், கடந்த சில மாதங்களாக பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்கவில்லை.
‘வை ராஜா வை’, ‘புறம்போக்கு’, ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட பல படங்கள் தொலைக்காட்சி நிறு வனங்களால் வாங்கப்படாமல் உள்ளன. இது தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து கடந்த ஜூலை 9-ம் தேதி ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
புதுப்படங்களின் ட்ரெய்லர், பாடல் காட்சிகள், காமெடி காட்சிகள் போன்றவற்றை இனி தனியார் தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப் போவதில்லை என்று இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தூர் தர்ஷன் மற்றும் ஜெயா டி.வி ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே ட்ரெய்லர், பாடல் காட்சிகள், காமெடி காட்சிகள் ஆகியவற்றைக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தின் தொலைக்காட்சி உரிமையை யார் வாங்குகிறார்களோ, அவர்களுக்கு மட்டும் ட்ரெய்லர், பாடல் காட்சிகள், காமெடி காட்சிகள் ஆகியவற்றை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.