'பில்லா’, ‘காளி’, ‘ஜானி’, ‘முரட்டுக்காளை; 80ல் எல்லாமே ஹிட்டு! 

'பில்லா’, ‘காளி’, ‘ஜானி’, ‘முரட்டுக்காளை; 80ல் எல்லாமே ஹிட்டு! 
Updated on
2 min read

வி.ராம்ஜி


1980-ல் ரஜினிக்கு மிக முக்கியமான வருடம். அந்த வருடத்தில், ரஜினிகாந்த் 8 படங்களில் நடித்தார். கமல் 4 படங்களில் நடித்தார்.


1980ம் ஆண்டு, ரஜினிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் மிக முக்கியமான ஆண்டு. இந்த வருடம் கமல் ‘உல்லாச பறவைகள்’ படத்தில் நடித்தார். ஐ.வி.சசியின் ‘குரு’ படத்தில் நடித்தார். ‘மரியா மை டார்லிங்’ எனும் படத்தில் நடித்தார். கே.பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ திரைப்படத்தில் நடித்தார்.


இதில் ‘குரு’, வறுமையின் நிறம் சிகப்பு’ இரண்டு படங்களும் கமலுக்கு ஹிட்டடித்தன. முதலாவது வசூல் ரீதியாக ஓடியது. இரண்டாவது... எடுத்துக் கொண்ட வேலையில்லாப் பிரச்சினை மற்றும் இயக்கத்தால் ஓடியது.


இந்த வருடத்தில், ரஜினிகாந்த் மளமளவென வரிசையாகப் படங்களில் நடித்தார். தேவர் பிலிம்ஸின் ‘அன்புக்கு நான் அடிமை’, ஐ.வி.சசியின் ‘எல்லாம் உன் கைராசி’, ’காளி’, ஏவிஎம்மின் ‘முரட்டுக்காளை’, கே.பாலாஜியின் ‘பில்லா’ முக்தா பிலிம்ஸின் ‘பொல்லாதவன்’, மகேந்திரனின் ‘ஜானி’, ‘நான் போட்ட சவால்’, என எட்டு படங்கள்.எட்டும் எட்டுவிதங்கள்.


ரஜினியின் ‘பைரவி’ அவரை எப்படி உயரத்துக்குக் கொண்டு சென்றதோ, அதேபோல், ‘பில்லா’ படமும் மிகப்பெரிய உயரத்துக்கு அழைத்துச் சென்று அமரவைத்தது. அதேபோல், ஏவிஎம்மின் ‘முரட்டுக்காளை’ மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமா... ‘பில்லா’ ஸ்டைலும் ‘சீவிடுவேன்’ என்கிற ‘முரட்டுக்காளை’ ஸ்டைல் வசனமும் செம பாப்புலர். ‘ஜானி’யின் வித்யாசாகர் ரஜினியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ‘பொல்லாதவன்’ படத்தில் லட்சுமியுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்த ரஜினியின் நடிப்பையும் ‘நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்’ ஆட்டத்தையும் கண்டு ரசிகர்கள் வியந்தார்கள்.


‘ஜானி’யும் ‘காளி’யும் ரஜினிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தார்கள். முக்கியமாக, ‘பொல்லாதவன்’ ரஜினியின் நடிப்புக்கு சான்று சொல்லியது. ரஜினிக்கு சம்பளமும் மார்க்கெட் வேல்யூவும் முக்கியமாக ரசிகர் பட்டாளமும் எகிறிக்கொண்டே போனதெல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in