Published : 22 Aug 2019 12:38 PM
Last Updated : 22 Aug 2019 12:38 PM

எம்ஜிஆரின் ’இதயக்கனி’க்கு 44 வயது! 

வி.ராம்ஜி


சினிமாவுக்கென, வெற்றிக்கென சில ஃபார்முலாக்கள் உண்டு. அந்த ஃபார்முலாவில் மிக மிக முக்கியமானதொரு ஃபார்முலா, தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை, பன்மடங்கு லாபத்தைக் கொடுத்தது. சந்தோஷம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் நடிகருக்கு மிகப்பெரிய இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. அந்த ஃபார்முலா... எம்ஜிஆர் ஃபார்முலா. அதனால் அவருக்குக் கிடைத்த வரவேற்பும், மரியாதையும் இமேஜும் நாம் அறியாதது அல்ல. இப்படியான ஃபார்முலாவுடன் வந்து, வெற்றிக்கனியைக் கொடுத்த படம்தான்... ‘இதயக்கனி’.


திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு, வெளியேற்றப்பட்ட பிறகு, எம்ஜிஆர், தன் படங்களில் இன்னும் வசனங்களில் கவனம் செலுத்தினார். தன் கட்சிக் கொடியை திரையில் காட்டினார். கொடியைப் பார்த்ததுமே கைத்தட்டிய ரசிகர்கள், வசனம் பேசும் போது ஆர்ப்பரித்துத் தெறித்தனர்.
சத்யா மூவீஸ் தயாரிப்பான ‘இதயக்கனி’ பிரமாண்டமான படமாக உருவாக்கப்பட்டது. இந்தி நடிகை ராதாசலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர்.


மிகப்பெரிய எஸ்டேட் முதலாளி மோகன், தொழிலாளர்களுக்கு அள்ளியள்ளிக் கொடுப்பவர். அவர் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஆதரவில்லாத அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஊர்மக்கள் ஒருமாதிரியாகப் பேச, அவளைத் திருமணம் செய்கிறார்.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரியைப் பார்க்க மோகன் செல்கிறார். அப்போதுதான், அவர் ரகசிய போலீஸ் என்பது ஆடியன்ஸூக்குத் தெரிகிறது. பெங்களூருவில் நடந்த ஒரு கொலைவழக்கைக் கண்டறியும் பணி மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுகுறித்த பணியில் இறங்கும் போது அவருக்கு ஓர் அதிர்ச்சி... கொலை செய்தவள் ஒரு பெண். அதுமட்டும் அல்ல... அவள் மோகனின் மனைவி.


அதிர்ந்த மோகன், அடுத்தடுத்து பெங்களூரு செல்கிறார். அங்கே ஒரு கூட்டத்தைச் சந்திக்கிறார்.மனைவியையே கைது செய்கிறார். அந்தக் கூட்டத்துக்கும் கொலைக்கும் உள்ள தொடர்பையும் அவர்களின் செயல்களையும் கண்டுபிடிக்கிறார். தன் மனைவி குற்றவாளி அல்ல எனும் உண்மையை உணர்த்துகிறார்.


77ல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். 75ம் ஆண்டு வெளியானது ‘இதயக்கனி’ திரைப்படம். ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையிலும் தயாரிப்பிலும் உருவானது இந்தப் படம். அறுபதுகளிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கூட, தன் படங்களில் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர், தானே கட்சி ஆரம்பித்ததும் இன்னும் கவனம் செலுத்தி, காட்சிகளைப் புகுத்தினார்.


படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.


அண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனின் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவே முடியாத எபிஸோடுகள்.


எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.


எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். ‘தொட்ட இடமெல்லாம்’ என்றொரு பாடலுக்கு ராதாசலூஜாவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஆடியிருப்பார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் அப்பவே வேற லெவல்தான்.


ராதாசலூஜா டபுள் ஆக்ட் போல் காட்சிப் படுத்திவிட்டு, திரைக்கதை விறுவிறுப்பாகும். ஆனால், கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாலாவும் எம்ஜிஆரின் மனைவி லக்ஷ்மியும் ஒருவரே என்பதை க்ளைமாக்ஸில் விவரிக்கும் போது, ஸ்கிரிப்டின் நுட்பம் வியக்கச் செய்தது.
ஒகேனக்கல், பெர்க்காரா, சிதம்பரம் பிச்சாவரம் என எல்லா இடங்களிலும் அழகு கொஞ்ச விட்டிருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். படத்துக்கு வில்லன் இல்லை. வில்லி. இதுவும் பேசப்பட்டது. மேலும் படத்தில், ஒரு ஆங்கிலப்பாடல். இதை உஷா உதூப் பாடியிருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் தன் இசையாலும் மெட்டுக்களாலும் படத்துக்கு பிரமாண்டம் கூட்டியிருப்பார்.


வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன்,ராண்டார்கை ஆகியோர் பாடல்களை எழுதியிருப்பார்கள். என் பேர் பிளாக் . அவர் பேரு ரெட்.எம்.ஜி. ரெட்’ என்பார் தேங்காய் சீனிவாசன். இந்தப் படத்துக்கு ராதாசலூஜாவின் மழலைக் குரலும் அவரின் கிளாமரும் மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தன. ஏ.ஜெகநாதனின் இயக்கம் படு கச்சிதம். பின்னாளில், வெள்ளைரோஜா, மூன்று முகம், காதல் பரிசு என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார் ஜெகநாதன்.


’தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர் எங்க பாஸ்’, எல்லாரும் ஒரு இலைலதான் விருந்து போடுவாங்க. நீங்க ரெட்டை இலைல விருந்து போட்டுட்டீங்க’ என்றெல்லாம் வசனம் வரும்.


1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரிலீசானது ‘இதயக்கனி’. படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் மக்கள் மனங்களில், நிரந்தரமாகவே இருக்கிறது... இருக்கிறார்... இதயக்கனியும் இதயக்கனியான எம்ஜிஆரும்!


வசூலிலும் வெற்றி... படத்துக்கும் நல்லபெயர்... எம்ஜிஆரின் இமேஜையும் உயர்த்தியது... என எம்ஜிஆரின் மறக்க முடியாத படங்களில் ‘இதயக்கனி’யும் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x