

சி.காவேரி மாணிக்கம்
மனிதனுக்கும் விலங்குக்குமான பாசப்பிணைப்பைச் சொல்லும் படம்தான் ‘பக்ரீத்’.
7 வருட போராட்டத்துக்குப் பின் கிடைத்த நிலத்தை உழுது, பயிரிடுவதற்காக, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் கடன் வாங்கச் செல்கிறார் விக்ராந்த். அந்த சமயம், பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக வடமாநிலத்தில் இருந்து ஒரு ஒட்டகம் அங்கு கொண்டு வரப்படுகிறது. அந்த ஒட்டகத்துடன், அதன் குட்டியும் வருகிறது. ‘குட்டியை ஏன் வாங்கி வந்தாய்?’ எனத் திட்டும் இஸ்லாமியப் பெரியவர், அதை என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார். அந்த ஒட்டகக்குட்டியைத் தான் வளர்க்கிறேன் என்று சொல்லி அழைத்துப் போகிறார் விக்ராந்த்.
விக்ராந்தின் மனைவி வசுந்தரா, அவர்களின் குழந்தைக்கும் ஒட்டக்குட்டியை பிடித்துப் போகிறது. அதற்கு சாரா எனப் பெயர்வைத்து, அதனுடன் நெருக்கமாகின்றனர். ஆனால், சாரா என்ன சாப்பிடும் எனத் தெரியாமல், மாட்டுக்குத் தரும் தீவனத்தையே அதற்கும் தருகின்றனர். இதனால், சில மாதங்களிலேயே சாராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. சாராவுக்கு மருத்துவம் பார்க்கவந்த கால்நடை மருத்துவரான எம்.எஸ்.பாஸ்கர், எந்த விலங்காக இருந்தாலும் அதனதன் இருப்பிடத்தில் இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும் என அறிவுரை வழங்குகிறார்.
எனவே, ஒட்டகங்கள் அதிகமாக உள்ள ராஜஸ்தானில் சாராவை விட்டுவிட முடிவெடுத்து, லாரியில் அதை ஏற்றிக்கொண்டு பயணிக்கிறார் விக்ராந்த். அவர் ஆசைப்பட்டபடி சாராவை ராஜஸ்தான் கொண்டு சேர்த்தாரா? வழியில் என்னென்ன சிரமங்களை அவர் சந்தித்தார்? சாராவின் பிரிவால் விக்ராந்த் குடும்பம் என்னானது? என்பதை உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.
கடன் வாங்கியாவது விவசாயம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் கொண்ட ரத்தினம் கேரக்டரில் நடித்துள்ளார் விக்ராந்த். ஒரு விலங்கைப் புதிதாகத் தன் குடும்ப உறுப்பினராக ஆக்கிக் கொள்வது, அதன் இருப்பிடம் இது கிடையாது எனத் தெரிந்ததும், அதனுடைய சொந்த இடத்தில் கொண்டுபோய் விடத் தவிப்பது, அது காணாமல் போனதும் பதறுவது என இந்தப் படத்துக்காக தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுத்துள்ளார் விக்ராந்த். இந்தப் படத்துக்குப் பிறகாவது தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல இடம் கிடைக்கும் என நம்பிக்கை வைக்கலாம். அன்பான மனைவியாக, பாசமுள்ள அம்மாவாக குறைந்த போர்ஷனே வந்தாலும், ரசிக்க வைக்கிறார் வசுந்தரா. விக்ராந்த் - வசுந்தராவின் குழந்தையாக நடித்துள்ள ஷ்ருத்திகா, தனக்கான கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.
குழந்தை அடம்பிடித்ததால் லேஸ் சிப்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, பின்னர் அதை ஒளித்துவைப்பது; ஒட்டகத்துக்கு இந்திதான் புரியும் என ஊரிலுள்ள மார்வாடி ஒருவரை அழைத்து வருவது; ஒட்டகத்தின் சாணியை எருவுக்குப் பயன்படுத்தலாமா? என யோசிப்பது என ரசிக்க வைக்கும் காட்சிகள் சின்னச் சின்னதாய் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அதேசமயம், இரண்டு மாதங்களே சென்னையில் தங்கியிருந்த வெள்ளைக்காரன், ஏராளமாகத் தமிழ் பேசுவது போன்ற லாஜிக் மீறல்களும் படத்தில் உள்ளன.
படத்தைப் போலவே ஆரம்பத்தில் தொய்வாகத் தொடங்கும் டி.இமானின் இசை, போகப்போக படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. சித்ஸ்ரீராமின் குரலில் ‘ஆலங்குருவிகளா...’ பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம். இயக்குநர் ஜெகதீசன் சுபுவே ஒளிப்பதிவும் செய்துள்ளார். தமிழ்நாட்டுக் கிராமங்களின் அழகும், வடமாநிலங்களின் வறட்சியும் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளான நாய், பூனை, கிளி போன்றவை மனிதர்களிடம் பாசமாக இருப்பது இயல்புதான். தனக்கு நெருக்கமான மனிதர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், அதற்காக அந்த செல்லப் பிராணிகள் செய்யும் விஷயங்களை ஏகப்பட்ட வீடியோக்களில் பார்த்திருப்போம். ஆனால், பாலைவனத்தில் வசிக்கும் ஒட்டகம், மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது என்பது திரைக்கதைக்குப் புதியது. ஆனால், படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.
மாடு, நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களிடம் தாங்கள் கொண்டுள்ள பாசத்தைச் சில செயல்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒட்டகத்தால் அது முடியாது என்ற யதார்த்தம் புரிந்தாலும், ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இன்னும் இந்தப்படம் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும். கண்ணீர்விட்டுக் கதறி அழவைத்திருக்கும். இருந்தாலும், இமைகளை நனைத்த பெருமையை எடுத்துக் கொள்கிறது இந்த ‘பக்ரீத்’.