

கிறிஸ்துமஸ் தின விடுமுறையைக் கணக்கில் கொண்டு 'ஹீரோ' மற்றும் 'சூரரைப் போற்று' ஆகிய படங்கள் வெளியாகின்றன.
'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்த போது, டிசம்பர் 20-ம் தேதி வெளியீடு என உறுதி செய்தது.
எப்போதுமே, கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்கள் என்பது மிகவும் பெரியது. ஏனென்றால் பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு பெரிய படங்கள் திட்டமிடப்படும். புத்தாண்டுக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் இருப்பார்கள் என்பதால், கிறிஸ்துமஸ் தின வெளியீட்டுக்குப் பிறகு புதிய படங்கள் வெளியீடு இருக்காது.
இதனால், 'ஹீரோ' படத்துடன் ஏதேனும் ஒரு பெரிய படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' என்பது உறுதியாகியுள்ளது. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கி வரும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'காப்பான்' செப்டம்பர் 20-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. ஆகவே, குறுகிய காலத்தில் 2 சூர்யா படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது 'சூரரைப் போற்று' படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சூர்யா படங்களைப் போல, சிவகார்த்திகேயனின் 2 படங்கள் குறுகிய காலத்தில் வெளியாகவுள்ளன. செப்டம்பர் 27-ம் தேதி 'நம்ம வீட்டுப் பிள்ளை' படமும், டிசம்பர் 20-ம் தேதி 'ஹீரோ' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.