

'பாகுபலி'யை ரசித்த ரசிகர்களை மகிழ்வித்தால் போதும் என்று 'சாஹோ' பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் பேசினார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. இரண்டரை ஆண்டுகளாகத் தயாரிப்பிலிருந்த இந்தப் படம், ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது படக்குழு.
தமிழில் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இயக்குநர் சுஜித், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரான், அருண் விஜய், கலை இயக்குநர் சாபுசிரில் ஆகியோர் கலந்து கொண்டனர். 'சாஹோ' தயாரிப்பாளர்களுக்கு நெருக்கம் என்பதால் ஞானவேல் ராஜாவும் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பில் பிரபாஸ் பேசும் போது, "’சாஹோ’ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாகப் பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். 'சாஹோ' படத்துக்காக 2 வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ண வேண்டும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது. தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார். ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். அதற்காக நீண்ட நேரம் செலவிட வேண்டியதிருந்தது. அபுதாபி, இத்தாலி, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பா நாடுகளிலும் படப்பிடிப்பு செய்துள்ளோம்.
சென்னையில் தான் பிறந்தேன். ஆகையால் நேரடி தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளது. அது கூடிய சீக்கிரம் நடக்கும். 'பாகுபலி' படத்தை ரசித்த ரசிகர்களை மகிழ்வித்தால் போதும். அது தான் என் எண்ணம். அதைவிடுத்து இந்திப் படம், ஹாலிவுட் படம் என்றெல்லாம் எண்ணவில்லை.
'பாகுபலி' வேறு 'சாஹோ' வேறு, இரண்டையும் ஒப்பிடக் கூடாது. அது வரலாற்றுப் படம், இது இப்போதைய காலகட்டத்தில் நடக்கும் கதை. இந்தியப் படங்களில் நீங்கள் இதுவரை பார்க்காத ஆக்ஷன் காட்சிகள் இதில் முதல் முறையாகப் பார்ப்பீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு 'சாஹோ' படக்குழுவினரிடமிருந்து ஆகஸ்ட் 23-ம் தேதி ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது" என்று பேசினார் பிரபாஸ்.